

கடந்த 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய திட்டக்குழு இனி ‘நிதி ஆயோக்’ அல்லது இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் என்று அழைக்கப்படும்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு, மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழலுக்கேற்றபடி புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி இந்த அமைப்பு உருவாக்கப்பட் டிருக்கிறது. இந்த புதிய அமைப்புக்கு பிரதமர் தலைமை வகிப்பார். இதில் ஆட்சி குழு உறுப்பினர்களாக மாநில முதலமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் இருப்பார்கள்.
மேலும் இந்த புதிய அமைப்பு தலைமைச் செயல் அதிகாரியும், துணைத்தலைவரும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். தவிர முழு நேர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், நான்கு மத்திய அமைச்சர்களும் இருப்பார்கள்.
தவிர மண்டல குழுக்களுக்கு பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இந்த அமைப்பு பல்வேறு விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக இருக்கும். இந்நிலையில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களின் கருத்தை மோடி கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான முதல்வர்கள் புதிய அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்தனர்.
முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, "பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பிறகு நிலைமை மாறியிருப்பதால், திட்டக்குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளார்" என்பதை நினைவுகூர்ந்தார்.
மேலும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் புதிய அமைப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுழற்சி முறையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மோடி கூறியிருந்தார்.