Published : 03 Jan 2015 11:43 AM
Last Updated : 03 Jan 2015 11:43 AM

‘வெற்றிகள் ஜாக்கிரதை’

இசை தட்டு வாங்க மியூசிக் ஸ்டோர் அல்லது திருட்டு டீவீடி கடைக்குச் சென்றால் கண்ணில் படுவது ‘இளையராஜா ஹிட்ஸ்’, ‘எம்எஸ்வி மெலடீஸ்’, ‘ரஜினி ஹிட்ஸ்’ போன்ற கதம்பங்கள்தான். இசைஞானி ஆயிரம் படங்கள் இசையமைத்திருக்க, அத்தனையும் வாங்க ஆசைதான், ஆனால் முடியுமா? கேட்க எங்கே நேரம். அதற்கு பதில் அவர் ஹிட்ஸ் வாங்கினால் காசு மிச்சம், ஒவ்வொரு பாட்டும் சூப்பராக இருக்கும்.

இப்படி ஹிட்ஸ் வாங்கும் கேஸா நீங்கள். உங்களுக்குத் தான் ’பிக் பிராண்ட்ஸ் பிக் ட்ரபுள்’ புத்தகம். ’ஜாக் ட்ரவுட்’ எழுதியிருக்கிறார். இதற்கு முன்பும் தனியாகவும் இவர் பார்ட்னர் ‘ஆல் ரீஸ்’ஸுடனுன் பட்டையைக் கிளப்பும் பல மார்க்கெட்டிங் புத்தகங்கள் எழுதியவர். அனைத்தையும் வாங்க பணம் இல்லை, மனம் இல்லை, படிக்க நேரம் இல்லை என்றால் இந்த புத்தகத்தை மட்டும் வாங்கிப் படியுங்கள். இது ஒரு ‘ஜாக் ட்ரவுட் ஹிட்ஸ்’ கலெக்‌ஷன்! அவரது முந்தைய புத்தகங்களின் சுருக்கம்.

‘திரும்ப திரும்ப சொல்ற நீ’ என்று ட்ரவுட்டை குறை கூறுபவர் உண்டு. அவர் எல்லா புத்தகங்களையும் படித்த எனக்கு இது குறையாகப் படவில்லை. ஒரு முறைக்கு பல முறை சொன்னால் தானே சிலருக்கு உறைக்கிறது!

குருட்டு நம்பிக்கை

ஹிட் கலெக்‌ஷன் டீவீடிகளுக்கு தீம் உண்டு. ‘எஸ்பிபி-ஜானகி டூயட்ஸ்’, ‘யேசுதாஸ் ஸோலோ ஹிட்ஸ்’ மாதிரி. இந்த புத்தகத்தின் தீம் பெரிய கம்பெனிகள் செய்யும் தவறுகள். பெரிய கம்பெனி ஆகிவிட்டோம் என்ற மமதையில், எதைத் தொட்டாலும் துலங்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் கம்பெனிகள் கண்மண் தெரியாமல் தவறு செய்து சரிகின்றன என்கிறார் ட்ரவுட். இவை சாதாரண பெரிய கம்பெனிகள் அல்ல. ’ஜெனரல் மோட்டார்ஸ்’, ’ஜெராக்ஸ்’, ’லீவைஸ் ஜீன்ஸ்’, ’கெல்லாக்ஸ்’ போன்ற பெ…..ரி…….ய கம்பெனிகள்.

ஒரு வாய்ப்பு

பரந்து விரிந்து பறந்த கம்பெனிகள், தெரிந்து தப்பு செய்து சரிந்து விழும் கதையும் அதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். அமெரிக்க கம்பெனிகளின் தவறுகளைத் தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது என்று அசட்டையாக இருக்காதீர்கள். இந்த புத்தகத்திலுள்ள உலகமகா தவறுகள் உலகமயமாக்கப்பட்டவை. நீங்களே கூட உங்கள் சின்ன சைஸ் கம்பெனியில் இதைச் செய்திருக்கலாம். செய்து கொண்டிருக்கலாம். செய்யலாம். தவறு என்று தெரியாமலே இருக்கலாம். திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று இந்த புத்தகத்தைப் படியுங்கள்.

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட புத்தகம். அத்தியாயத்திற்கு ஏழெட்டு பாடங்கள். சாம்பிளுக்கு சிலதை மட்டும் தெளிக்கிறேன்; நம்மூர் உதாரணங்களுடன்.

யுபி-யின் கதை

வீட்டு வாசலில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டைப் போல் ‘வெற்றிகள் ஜாக்கிரதை’ என்றும் கம்பெனியில் ஒட்டவேண்டும். பல கம்பெனிகளுக்கு வெற்றி தலைக்கேறி, கண்ணை மறைத்து எதனால் வெற்றி பெற்றோம் என்பது மறந்து அதற்கு நேர் எதிராக பயணித்து படுகுழியில் விழுகின்றன. இருக்கும் பாட்டிலை மறந்து பறக்கும் விமானத்திற்கு ஆசைப்பட்டு விபத்துக்குள்ளான நம்மூர் ‘யுனைடெட் ப்ரூவரீஸ்’ கதையை அடுத்த முறை பாட்டிலைப் பார்த்தால் நினைவுகூறுங்கள்!

அகலக் கால் வைத்தால்…

போட்டி நிறைந்த பிசினஸ் உலகில் ‘ஃபோகஸ்’ முக்கியம். நமக்கு எது தெரியுமோ அதை மட்டும் செய்து வளர முயலவேண்டும். அகல கால் வைக்க முயன்றால் அகால மரணம் என்பதை அறியவேண்டும். தெரிந்த காஸ்மெடிக்ஸ் தொழிலில் கவனம் செலுத்தாமல் தெரியாத ரெஸ்டாரண்ட் தொழிலில் இறங்கி தனக்குத் தானே தோல்வியை சூடாக பரிமாறிக்கொண்ட ‘கவின்கேர்’ போல வேண்டாமே.

ஒரு பொருள் பிரிவின் லீடராவது லேசுபட்ட காரியமல்ல. அப்படி ஆகிவிட்டால் எந்த ஒரு சிறிய போட்டி மூவையும் முளையிலேயே கிள்ளி எறிவதுதான் லீடருக்கு அழகு. சின்ன சைசில் வந்த ‘சிக் ஷாம்பு’ சாஷேவை கண்டுகொள்ளாமல் வளர விட்டு இன்று அதே பிராண்டிடம் மார்க்கெட்டைப் பறிகொடுத்த ‘சன்சில்க்’, ‘ஹேலோ’ ஷாம்புகள் போல் செய்ய வேண்டாமே.

நீங்கள் எத்தனை பெரிய கம்பெனியாக இருந்தாலும், எத்தனை கோடி விளம்பரத்திற்கு செலவழிப்பவராக இருந்தாலும் விற்கும் பிராண்டை வித்தியாசப்படுத்தி விற்க முயலுங்கள்.

ஏற்கெனவே இருக்கும் பிராண்டைப் போலவே புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவது அறிவீனம். புத்துணர்ச்சி தர ஏற்கெனவே ‘லிரில்’ சோப் இருக்க, ‘நானும் புத்துணர்ச்சி தருவேன்’ என்று அடம்பிடித்து அறிமுகமாகி ஃபனாலான பன்னாட்டு கம்பெனியின் ‘ஃபா’ சோப்பு போல் செய்து தொலைக்க வேண்டாமே.

தொலை நோக்கு பார்வை

கம்பெனிகளை விளாசியது பத்தாதென்று தவறுகள் செய்யத் தூண்டும், செய்யும் போது தடுக்காத வால் ஸ்ட்ரீட்டையும் விட்டு வைக்கவில்லை ட்ரவுட். கம்பெனியில் முதலீடு செய்துவிட்டோம் என்பதற்காக சதா வாலை ஆட்டும் வால் ஸ்ட்ரீட் வாலை ஒட்ட நறுக்கினால் தேவலை என்கிறார். கம்பெனி வளர தொலை நோக்குப் பார்வை முக்கியம். இன்று எடுக்கும் எல்லா முடிவுகளும் நாளையே பலன் தராது. பொறுமை தேவை. ’முதலீட்டிற்கு முதல் நாள் முதற்கொண்டே லாபம் கொடு என்று நிர்பந்தித்தால் கம்பெனியால் சரியாய் சிந்தித்து செயல்படமுடியுமா? உடனடி லாபத்திற்கு அதிரடி முடிவு எடுத்து தடாலடியாக விழுகிறது கம்பெனிகள். வால் ஸ்ட்ரீட் மட்டுமல்ல, தலால் ஸ்ட்ரீட்டுக்கும் இது பொருந்தும் தானே!

ஏசி அறை அறிக்கை கதைக்கு உதவாது

வழிநடத்த ஆலோசகர்கள் அமர்த் தினால் அவர்கள் அலப்பறை அதை விட அதிகமாய் இருக்கிறது. பல ஆலோசகர்கள் வாடிக்கையாளர்களை சந்தித்திருந்தால் தானே அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படித் தரவேண்டும் என்று புரியும். ஏசி ரூமில் ரிப்போர்ட்டுகள் எழுதிக்கொண்டிருந்தால் உருப்பட்டா மாதிரி தான் என்கிறார் ட்ரவுட்.

ஒரு வேளை ஆலோசகர்களுக்கு தவறு நடப்பது தெரிந்தாலும் அதை கம்பெனியிடம் சொல்ல தைரியம் வருவதில்லை. கம்பெனிக்கு எதை சொன்னால் பிடிக்குமோ அதைச் சொன்னால்தான் பிழைப்பு நடக்கும் என்று சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்புறம் என்ன, கம்பெனி பை பாஸ் ரோட் பிடித்து பாதாளத்தை நோக்கி பாய்கிறது!

இயக்குநர்களுக்கும் பங்குண்டு!

அடுத்த குற்றவாளிகள் ஃபோர்ட் ஆஃப் டைரக்ட்டர்கள். சட்டம் சொல்கிறதென்று, கடனே என்று தெரிந்தவர்களை டைரக்டராய் அமர்த்தி அவர்கள் மீட்டிங்கில் டீயும் பிஸ்கட்டும் தின்று கம்பெனி போகும் திசையைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் இந்த கூட்டத்தையும் ஒரு சாடு சாடுகிறார். தவறுகளை போர்ட் மீட்டிங்கில் தட்டிக் கேட்காத டைரக்டர்களை இரண்டு தட்டு தட்டினால் என்ன என்று ட்ரவுட் கேட்கும் போது கை தட்டத் தோன்றுகிறது!

கம்பெனி சிஇஓவையும் (நம்மூர் பாஷையில் எம்,டி, சேர்மன், ஓனர்) விடவில்லை ட்ரவுட். கம்பெனிகள் வளர்வதும், வழுக்கி விழுந்து வழக்கொழிந்து போவதும் கம்பெனி சிஇஓ எடுக்கும் முடிவுகளால்தான். ஒன்று, பிரச்சினை உருவாவதற்கு அவர்கள் காரணமாகிறார்கள். இல்லை உருவான பிரச்சினை தடுக்கத் தவறுகிறார்கள்.

சிஇஓ-தான் பொறுப்பு

கப்பலின் ஒவ்வொரு முடிவையும் எடுப்பது அதன் காப்டன். அவரே கப்பலின் அனைத்திற்கும் பொறுப்பு. அதே போல் கம்பெனி என்னும் கப்பலின் காப்டன் அதன் சிஇஓ. சிஇஓ இஸ் தி காப்டன் ஆஃப் த ஷிப். கம்பெனி எடுக்கும், எடுக்கத் தவறும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும், முயற்சிக்கும் அவரே பொறுப்பு.

நீங்கள் முதலாளியோ, எம்டியோ, சிஇஓ எனில் ஆபிஸ் ரூமில் சாமி படங்களுக்கு நடுவில் இன்னொரு ஃபோட்டோவையும் வையுங்கள். தினமும் அதை ஒரு பத்து முறையாவது பாருங்கள். முடிந்தால் மணிபர்ஸில் கூட வையுங்கள், தப்பில்லை. ‘என்ன ஃபோட்டா என்றா கேட்கிறீர்கள்’?

’டைட்டானிக்’!

- satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x