

ஐஎன்ஜி வைஸ்யா வங்கி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
தங்களது பணிபாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை முன் வைத்து ஐஎன்ஜி வைஸ்யா வங்கி பணியாளர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஐஎன்ஜி வைஸ்யா வங்கி, நேற்று தனது பங்குதாரர்கள் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் கோடக் மஹிந்திரா வங்கியுடன் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை இணைப் பதற்கான ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. அதுபோல கோடக் மஹிந்திரா நிறுவனமும் தனது பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
கோடக் மஹிந்திரா வங்கி ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை ரூ.15,000 கோடிக்கு கையகப்படுத்தி உள்ளது. ஐஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பணியாளர்கள் கலந்து கொண்டனர். வங்கிகளை இணைப்பதற்கு முன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோடக் மஹிந்திரா வங்கி, ஐஎன்ஜி வங்கி மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் மூன்று தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஐஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் கே.ஜே. ராமகிருஷ்ண ரெட்டி. பணிபாதுகாப்பு, சம்பளம், சேமநிதி, பணிக்கொடை, ஓய்வுகால சேமிப்பு, உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் உள்ளதே நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார் ரெட்டி.
மேலும் இது தொடர்பாக மண்டல தொழிலாளர் ஆணையர் முன்பாக ஐஎன்ஜி வைஸ்யா மற்றும் கோட்டக் மஹிந்திரா நிர்வாகம் தீர்வு காண முன்வர வேண்டும் என்றனர். இதுபோன்ற இணைப்புகள் பொதுத்துறை வங்கிகள் நடக்கலாம் என்று கூறிய அவர். தனியார் துறை வங்கிகளில் நடக்கும்போது தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.