

வங்கிகளை இணைப்பது மற்றும் கையகப்படுத்துவது ஆகியவை மட்டுமே வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க உதவாது என்று நிதித்துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். வங்கிகள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே அரசு சிந்திப்பதாக நினைக்கக்கூடாது. இவ்விரண்டு வழிகளைத் தவிர எத்தனையோ வழிகளும் உள்ளன.
வங்கிகளை அரசு நன்கு ஆதரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதற்கு பிரதி பலனாக வங்கிகள் தங்களது நிதி ஆதாரத்தை தாங்களே பெருக்கிக் கொள்ளக்கூடும். அதாவது வெளிச் சந்தையிலிருந்து தங்களுக்கு தேவையான நிதி வளத்தை பெருக்கிக் கொள்ளக் கூடும். இது வங்கிகளின் நிதி வளத்தை அதிகரிக்க உதவும்.
பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும் நடவடிக்கையானது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நடவடிக்கையாகும். பல்வேறு குழுக்களும் இதைப் பரிந்துரைத்த போதிலும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ஆதியா குறிப்பிட்டார்.
இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் உள்பட 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. வங்கித்துறையினர் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் (கியான் சங்கம்) தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதியா மேலும் கூறியது: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வங்கிகள் இணைக்கப்படுவதை வரவேற்றுள்ளார். பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பும் சுட்டிக் காட்டியுள்ளது. அரசும் இதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது.
வங்கிகளின் பார்வையில் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்குவது மறு வரையறை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இப்போதைய பொருளாதார சூழலில் பொருந்தக் கூடிய வகையில் வரையறை இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதைய சூழலில் மொத்தம் வழங்கப்படும் கடனில் 40 சதவீதம் முன்னுரிமை துறைகளுக்கு (விவசாயம் உள்பட) வழங்கப்பட வேண்டும் என்றே அரசு கருதுகிறது.
வங்கிகள் தேசியமயமாக் கப்பட்ட 1969-ம் ஆண்டிலி்ருந்த பொருளாதார சூழலுக்கும் இப்போது நிலவும் பொருளாதார சூழலுக்கும் அதிக வேறுபாடு உள்ளன. உணவு பதப்படுத்தல் துறை என்பது மிகவும் பிரதான தொழிலாகும்.
ஆனால் அத்துறை முன்னுரிமை கடன் வழங்கும் துறைக்கான பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் ஆதியா சுட்டிக் காட்டினார். அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்யும் திட்டத்தின்கீழ் இதுவரை 10.30 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 98 சதவீத குடும்பங்கள் இணைக்கப்பட் டுள்ளன. அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபடுகிறோம். இந்த இலக்கை ஜனவரி 26-ம் தேதிக்குள் எட்டி விடுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கிய மானதாகும். வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் வேளையில் வங்கித் துறையில் சீர்திருத்தம் மிகவும் அவசியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடன் தேவை குறைவு
கடனுக்கான தேவை குறைந்துள்ளது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும் என்று குறிப்பிட்ட ஆதியா, வங்கிகளின் வாராக் கடனும் பிரச்சினை தரக்கூடியது என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐந்து ஆண்டுகளாக சரிவில் இருக்கும்போது கடன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடன் வழங்குவதில் வளர்ச்சி விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது. அதேசமயம் சேமிப்பு அளவு 7.6 சதவீதமாக அதிகரித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
கடன் வழங்கு அளவை அதிகரிக்க பெரும்பாலான வங்கிகள் சில்லரைக் கடன் வழங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.