

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்களிப்பைக் குறைப்பதால் வங்கிகளின் நிதி நிலை பேசல்-3 நிலைக்கு உயர போதுமானதாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வங்காள வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் நேற்று பேசிய அவர் மேலும் கூறியது: வங்கிகள் பேசல்-3 என்ற நிலையை எட்டுவதற்கான மூலதனத்தை திரட்டுவதற்கு அரசுத்துறை தனது பங்குகளை விலக்கிக் கொள்வது போதுமானதாக இருக்காது.
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு அளவை 52 சதவீத மாகக் குறைத்துக் கொள்ள வேண் டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பேசல்-3 மூலதன அளவை எட்டுவதற்கு இது போதுமானதல்ல. எனவே பொதுத்துறை வங்கிகள் அடுத்த 5 ஆண்டுகளில் எந்தெந்த வகையில் முதலீட்டை அதிகரிக்கலாம் என்பது குறித்து தெளிவாக திட்டமிட வேண்டியது அவசியம் என்றார்.
மூலதனத்தைத் திரட்டுவதில் வங்கிகளுக்கு உள்ள ஆதாரங்களை ஆராய வேண்டும். வாக்குரிமை அல்லாத மூலதனத்தை திரட்டும் வழி, பன்முக வாக்குரிமை மூலம் முதலீடு திரட்டுவது மற்றும் தங்கம் வாக்குரிமை பங்கு மூலதனம் ஆகியன இதில் முக்கியமான வாய்ப்புகள் என்று சுட்டிக் காட்டினார்.
டயர் -1 மூலதன திரட்டலுக்கு ரூ. 4.50 லட்சம் கோடி தேவைப் படுகிறது. இதையடுத்து பங்கு மூலதனமாக ரூ. 2.40 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
டயர்-2 மூலதனத்தைத் திரட்டுவதற்கு வங்கிகள் நீண்ட கால அடிப்படையிலான கடன் பத்திரங்களை வெளியிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கியின் வாராக் கடன் குறித்து பேசிய அவர், வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க தொடர்ந்து பல்வேறு உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பணத்தை திருப்பிச் செலுத்த போதிய நிதி ஆதாரம் இருந்தும் வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்களிடமிருந்து மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் வாராக் கடன் வசூல் மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதுபோன்ற வாராக் கடன் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகள்தான் சுயமாக சில ஒழுங்குமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். எந்த ஒரு குறிப்பிட்ட துறைக்கும் மிக அதிக அளவில் அதாவது வங்கிகளுக்கு பரிச்சயமில்லாத துறைகளுக்கு அதிக அளவில் கடன் அளிக்கக் கூடாது என்றார்.
வங்கிகள் இணைப்பு குறித்து பேசிய அவர், இது அந்தந்த வங்கிகள் சுயமாக எடுக்க வேண்டிய முடிவாகும். இதில் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது, இது அரசுக்கும் பொருந்தும் என்றார்.
வர்த்தக ரீதியில் எந்த ஒரு இணைப்பும் லாபகரமானதாக இருக்கும் என்றால், அத்தகைய இணைப்பு நிச்சயம் வெற்றிபெறும் என்றார் காந்தி.
வங்கியல்லாத நிதி நிறுவனங் கள் வங்கிகளுக்கு ஒரு போதும் போட்டியாக மாற முடியாது. வங்கிகளைக் காட்டிலும் இத்தகைய என்பிஎப்சி-க்களுக்குத்தான் அதிக சிரமம் உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
பொதுத்துறை வங்கிகளும் இப் போது சுதந்திரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. இவற்றின் தலைவர்களாக தொழில்முறை யில் சிறந்தவர்களே நியமிக்கப்படு கின்றனர். எனவே வங்கியின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை இவர்கள் சுயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.