Published : 06 Jan 2015 12:04 pm

Updated : 06 Jan 2015 12:04 pm

 

Published : 06 Jan 2015 12:04 PM
Last Updated : 06 Jan 2015 12:04 PM

வெட்டிவேரு வாசம் 17 - நாய்கள் ஜாக்கிரதை!

17

நாயே, என் நண்பா..!

காட்சி 1:


கல்கியில் சினிமா விமர்சனங்கள் எழுதிய காலம். அடையாறு கணபதி ராம் தியேட்டர். ‘தழுவாத கைகள்’ இரவுக் காட்சி. படம் முடியும்போது இரவு மணி ஒன்றரை. 10 நிமிட நடையில் வீடு. அடுத்தடுத்த திருப்பங்களில் என்னுடன் வந்தவர்கள் திரும்பிவிட, விஜயகாந்த், அம்பிகா பற்றி எழுதுவதற்கான வாக்கியங்களை யோசித்தபடி தனியே நடந்தேன். இன்னும் 100 மீட்டர் நடந்தால், எங்கள் குடியிருப்பு.

திடீரென்று ஆக்ரோஷமான ஒரு குரைப்பு. திரும்பிப் பார்த்தால், குரூரமாகப் பற்களைக் காட்டிக்கொண்டு, தெரு நாய். குனிந்து கல்லை எடுப்பது போல் நாடகமாடினால், நாய்கள் ஓடிவிடும் என்பது அனுபவம். குனிந்தேன். அதிர்ந்தேன். எங்கெங்கிருந்தோ நாயின் ஐந்தாறு சகாக்கள் கூடிவிட்டன.

அரைவட்டமாக என்னைச் சூழ்ந்து நின்று ஆக்ரோஷமாகக் குரைத்தன. குனிந்தால் ஏதாவது ஒரு நாய் என் மீது பாய்ந்துவிடக்கூடும். கிலியில், நாடித் துடிப்பு எகிறியது. ரத்தத்தை பம்ப் செய்யும் வேகம் தாங்க முடியாமல் இதயம் தவித்தது. கால்கள் வெடவெடத்தன. ‘ஓடினால் உன் ஆடுசதை நிச்சயம் நாய்களுக்குத்தான்…’ என்று புத்தி அறிவுறுத்தியது.

கர்ப்பகிரகத்தில் இருந்து வெளிப்படும் தீவிர பக்தனைப் போல், நாய்களுக்கு முதுகைக் காட்டாமல் அப்படியே மெள்ளப் பின்வாங்கினேன். நாய்கள் அதே இடைவெளியில் குரைப்பை நிறுத்தாமல், அரைவட்டமாக முன்னேறின. ‘இருட்டுல பயமா இருந்தா, ராமா… ராமான்னு சொல்லு. பயம் போயிடும்...’ என்று எப்போதோ பாட்டி சொல்லியிருந்தாள். பயம் போகிறதோ இல்லையோ, நாய் போனால் போதும்.

‘ராமா… ராமா... ராமா...’ - ஓரோர் அடியாகப் பின்வாங்கினேன். ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டியதும், நாய்கள் குரைத்தபடி நின்றுவிட்டன. கடைசி சில மீட்டர்களை சடுதியில் கடந்து, குடியிருப்புக்குள் நுழைந்தேன். படிகளிலும் நாய் துரத்துகிறதா என்று பார்த்தபடியே, இரண்டு மாடிகளை ஓடியே படியேறினேன்.

கதவைத் திறந்த மனைவி என் முகத்தையும், தெப்பலாக நனைந்திருந்த சட்டையையும் பார்த்து மிரண்டாள்.

“ஏம்ப்பா, பேய்ப் படமா..?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

காட்சி 2:

ஒரு ஜனவரி மாதம். டெல்லியில் உலகத் திரைப்பட விழா. அதீதக் குளிரில் டெல்லியே ஸ்வெட்டரும் கோட்டும் அணிந்திருந்தது. டெல்லியில் இருந்த நண்பன், எங்கள் ராணுவக் கதைகளை ஆர்வத்துடன் படிப்பவன். அவன் பணிபுரிந்த வங்கியின் வாடிக்கையாளரான ஒரு ராணுவ அதிகாரியை நான் சந்திக்க ஏற்பாடு செய்தான். முகவரி கண்டுபிடித்து போனேன்.

தோட்டத்துடன் வீடு. கம்பிகள் வேய்ந்த கேட்டில் ‘நாய் ஜாக்கிரதை’ எச்சரிக்கை.

கேட்டில் கை வைத்ததும், உள்ளேயிருந்து கருப்புச் சிங்கம் போல் இடுப்பு உயர டாபர்மேன் பாய்ந்து வந்தது. கேட்டை உடைத்துக்கொண்டு என் குரல்வளையைப் பற்றிவிடுவது போன்ற ஆக்ரோஷமான வேகம். மிரண்டு பல அடிகள் பின்வாங்கினேன். பால்கனியில் பேப்பர் தழைந்து, கர்னல் முரளிதரின் கண்கள் என்னைப் பார்த்தன. கையசைத்து அறிமுகம் செய்துகொண்டேன்.

“கீதூ..!” என்று அழைத்தார்.

அழைத்தது நாயை அல்ல என்று வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட நான்கு வயதுச் சிறுமியைப் பார்த்ததும்தான் புரிந்தது. அவள் நாயின் உயரம்கூட இல்லை.

“பிங்க்கூ..” என்று அதட்டினாள். நாய் திரும்பிப் பார்த்தது. அடர்கறுப்பு நாய்க்கு ‘பிங்க்கு’ என்று ஏன் பெயர்?

“கம் ஹியர்...” என்று அடுத்த அதட்டல். நாய் என்னிடம் குரைத்துவிட்டு, அவளிடம் ஓடியது.

“பிங்க்கூ.. ஸிட்..!”

கால்களை மண்டியிட்டு அமர்ந்தது. ஆனாலும் அதன் பார்வை என் மீதிருந்து விலகவில்லை.

கீது, நாயின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

“கம் அங்கிள்… பிங்க்கூ ஒண்ணும் செய்யாது” என்றாள். பிங்க்கு கழுத்தை ஓர் உதறு உதறினால், சிறுமி பத்தடி பறந்தே போவாள்.

உதறலுடன் கேட்டைத் திறந்து காலை உள்ளே வைத்தேன். பிங்க்கு திமிறி எழுந்தது. நவ நாடியும் ஒடுங்க, என் இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது.

“பிங்க்கூ..!” என்று கீது க்ரீச்சிட்டாள். ஆக்ரோஷமாகக் குரைத்தாலும், ஆணி அடித்தது போல் டாபர்மேன் அங்கேயே நின்றது. கீது சங்கிலியை எடுத்தாள். எம்பி, நாயின் கழுத்தில் பூட்டினாள். சாதுவாக அது கழுத்தைக் காட்டிக்கொண்டு நின்றது.

வேட்டை நாய் ஒரு குழந்தையின் வார்த்தைக்குப் பணிந்து அடங்கிப்போனது, திகைப்பாக இருந்தது. கர்னலிடம் ராணுவத்தைப் பற்றிக் கேட்கும் முன், அதைப் பற்றிதான் கேட்டேன்.

“ஓ..! கீது பொறந்ததுலேர்ந்து பிங்க்கூ ஒவ்வொரு நாளும் பக்கத்துல இருந்து அவளைப் பார்த்திருக்கு.. யாருக்குக் கட்டுப்படலைன்னாலும், கீதுகிட்ட கட்டுப்படும்...” என்று சிரித்தார்.

நாய்கள் பற்றி புதிதாக ஒரு செய்தி கிடைத்தது.

‘நாம் இருவர், நமக்கு இருவர்’ திரைப்படம். இந்துவிடம் பிரபு என்றும், பூஜாவிடம் தேவா என்றும் இரு சகோதரிகளிடம் இரண்டு வெவ்வேறு நபர்களாக நாடகமாடுவான் நாயகன் (பிரபுதேவா). அவன் உண்மையில் காதலிப்பது இந்து (மீனா)வைத்தான். தேவாவாக அந்த வீட்டு நாயிடம் அவனுக்கு பழக்கம் இருப்பதை இந்து அறிந்திருப்பாள்.

க்ளைமாக்ஸில், இருவருமே அவனுக்குக் கிடைக்கப் போவதில்லை என்று ஒரு கட்டம். அவன் தேடிவந்த வைரம் ஒளித்து வைக்கப்பட்ட குரங்கு பொம்மையை நாய் அவனிடம் கொண்டுவந்து தரும்.

“நான் இதைப் பெரிசா நினைச்சு ஆசைப் பட்டபோது, இது கிடைக்கல. இப்ப, ஆசைப்பட்டது கிடைக்காதபோது, இது எனக்குப் பெரிசாத் தெரியல...” என்று பிரபு வேடத்தில் இருந்தபடி அவன் நாயிடம் பேசிக் கொண்டிருப்பான்.

இந்து பார்ப்பாள். அதிர்ந்துபோவாள். “தேவா..!” என்று அழைப்பாள். தன்னிச்சையாக அவன் திரும்பிப் பார்ப்பான்.

பிரபுவாகவும், தேவாவாகவும் ஒருவனே நடித்திருக்கிறான் என்று நாய் மூலம் குட்டு வெளிப்படும். பலரால் ரசிக்கப்பட்ட காட்சி அது.

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmial.com


நாய்கள் ஜாக்கிரதைவெட்டிவேரு வாசம்செவ்வாய் சினிமாதொடர்சுபாநாம் இருவர் நமக்கு இருவர்பிரபுதேவாமீனா

You May Like

More From This Category

More From this Author