Last Updated : 15 Jan, 2015 11:46 AM

 

Published : 15 Jan 2015 11:46 AM
Last Updated : 15 Jan 2015 11:46 AM

பணவீக்கம் 0.11 சதவீதம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டிசம்பருடன் முடிவடைந்த மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 0.11 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான விலை டிசம்பரில் 0.11 சதவீதமாக இருந்தது. இது கடந்த நவம்பரில் பூஜ்ய நிலையில் இருந்தது. பூஜ்ய நிலைக்குக் கீழே செல்லும் என்ற நிலை மாறியுள்ளது. உணவுப் பொருள்களின் விலை சற்று அதிகரித்ததால் பணவீக்கம் சற்று உயர்ந்துள்ளது. பருப்பு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகள் சற்று உயர்ந்திருந்தன. கோதுமை, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

எரிபொருள் மற்றும் மின்துறை பணவீக்கம் 7.82 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 4.91 சதவீதமாக இருந்தது.ஓராண்டுக்கும் மேலாக வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யாமல் 8 சதவீதம் என்ற நிலையையே ஆர்பிஐ தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. புதிய நிதிக் கொள்கை பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும். அப்போது கடனுக்கான வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரு பீப்பாய்க்கு 46 டாலர் என்ற அளவுக்குச் சரிந்துள்ளது. பணவீக்கக் குறைவுக்கு இது முக்கியக் காரணமாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையிலான டிசம்பர் மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த நவம்பரில் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வட்டியைக் குறைக்க வலியுறுத்தல்

இதனிடையே கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மிக மெதுவாக நடைபெறுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை முடுக்கிவிட வட்டிக் குறைப்பு அவசியமாகிறது என்று ஃபிக்கி அமைப்பின் தலைவர் ஜோத்ஸனா சூரி குறிப்பிட்டார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் இலக்கு ஓரளவு எட்டப்பட்டுவிட்ட நிலையில் இனி பொருளாதாரத்தை முடுக்கிவிடும் பணியில் ஆர்பிஐ செயல்படும் என நம்புவதாக சிஐஐ டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x