

டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, இதனால் உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என்ற கணிப்பு காரணமாக பாதுகாப்பான முதலீட்டை நோக்கி முதலீட்டாளர்கள் செல்கின்றனர்.
ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வட்டி விகிதத்தின் அளவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. மேலும் கடந்த 2 தினங்களில் கச்சா எண்ணெய் 10 சதவீத அளவுக்கு சரிந்ததால் சர்வதேச பொருளாதாரம் பணவாட்ட நிலைமைக்குச் சென்றுவிடும் என்ற முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் ஜனவரி 22-ம் தேதி ஐரோப்பிய மத்திய வங்கி, கொள்கை முடிவுகளை எடுக்க கூடுகிறது. இதில் ஊக்க நடவடிகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கூடுதலாக பணத்தை அச்சடிக்கும் நடவடிக்கை இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், யூரோவை முதலீட்டாளர்கள் விற்க ஆரம் பித்தார்கள். இதனால் யூரோவின் மதிப்பு சரிந்தது.