

அதிக நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகா வாட் மின்சாரத்தை சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவற்காக பொதுத்துறை நிறுவனங்கள் சூரிய மின்னுற்பத்தியில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்
பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க மற்றும் மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலர் தருண் கபூர் தெரிவித்தார். அதிக நிதி வளம் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அமைச்சகம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் நிதியை கையிருப்பில் வைத்துள்ளன. இதனால் தங்கள் நிதியில் ஒரு பகுதியை சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது தொடர்பாக அந்நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) 3,300 மெகாவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனம் தொடக்கத்தில் 750 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசுத் துறை எண்ணெய், எரிவாயு நிறுவனங்களும் மிகச் சிறிய அளவில் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளன.