Last Updated : 30 Jan, 2015 03:52 PM

 

Published : 30 Jan 2015 03:52 PM
Last Updated : 30 Jan 2015 03:52 PM

குரூப் ஸ்டடிங்கிற பேர்ல...

பரீட்சை சீசன் வந்துவிட்டது. பள்ளி மாணவர்களானாலும் கல்லூரி மாணவர்களானாலும் இனி அடுத்தடுத்துத் தேர்வுகள்தான். இத்தனை மாதங்கள் விளையாட்டுத்தனமாக இருந்த மாணவர்கள்கூடக் கொஞ்சம் சீரியஸ் ஆகிவிடுவார்கள். எப்படியாவது பாடத்தைப் படித்து முடிக்க வேண்டுமே என யோசிக்கும் போது டக் எனத் தலையில் ஒரு பல்பு எரியும்.

அதுதான் ’குரூப் ஸ்டடி’. தேர்வுக்கான விடுமுறை அளிக்கப்படும் பத்தே நாட்களில் குழுவாகச் சேர்ந்து படித்து அத்தனை பாடங்களையும் கரைத்துக் குடித்துவிடலாம் எனச் சபதம் எடுத்து ஒன்று கூடுவார்கள். பெற்றோரும் பிள்ளை படிக்கச் செல்கிறார் என்று மகிழ்ச்சி அடைவார்கள். இது போன்ற குரூப் ஸ்டடியின் போது இவர்கள் உண்மையாகவே படிப்பார்களா? என்னதான் செய்வார்கள்?

சத்தியமா நான் படிப்பேங்க!

குரூப் ஸ்டடி என்ற வார்த்தைகளைக் கேட்டதும் தேவியின் முகம் மலர்ந்தது. குரூப் ஸ்டடி பண்ணும்போது விளையாட்டாக இல்லாமல் கலந்து ஆலோசித்துப் படிப்பாராம். யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் ஏதாவது அமைதியான இடத்தில் குழுவாக இணைந்து படிப்பதுதான் இவருடைய ஸ்டைலாம்.

“என்னுடைய தோழிகள் அனைவரும் என்னைவிட அதிக மதிப்பெண் எடுப்பவர்கள். எனவே அவர்களோடு இணைந்து படிக்கும் போது வகுப்பில் கவனிக்காமல் விட்ட சில பாடங்களைக் குரூப் ஸ்டடி செய்யும்போது தெரிந்து கொள்வேன். அதனால் அம்மா சத்தியமா நான் படிப்பேங்க!” என்று பொறுப்பான பெண்ணாகப் பேசுகிறார் தேவி.

குரூப் ஸ்டடி தான் பெஸ்ட்

பேசும்போது படப் படவென வெடிக்கும் ஷாலினிக்கு எப்போதும் குரூப் ஸ்டடி தான் விருப்பமாம். அதற்கு ஒரு காரணமும் வைத்திருக்கிறார். “தேர்வுக்காகத் தனியாகப் படிக்கும்போது நம் தோழி நம்மை விட அதிகமாகப் படித்திருப்பாளோ? அதிக மதிப்பெண் எடுத்து விடுவாளோ? என்று யோசித்துப் பாதி நேரத்தை வீண் அடித்து விடுவோம்.

அதே இணைந்து படிக்கும் போது கண்டிப்பாக நாம் படித்ததைத் தான் அவளும் படிப்பாள். அவளும் தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுப்பாள். அவளும் நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை யோசித்து நேரத்தை வீண் அடிக்க மாட்டாள்” என்று உஷாராகப் பேசும் ஷாலினி, குரூப் ஸ்டடிஸில் யார் படிக்கிறார்களோ இல்லையோ தனக்குத் தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நன்றாகப் படித்து விடுவாராம்.

அட இது நல்லா இருக்கே!

அரட்டையால் போன தேர்வு

அனைவரையும் கிண்டல் அடித்தபடி துள்ளித் திரிந்த பிரஷாந்திடம் குரூப் ஸ்டடி பற்றி கேட்டதும் படிப்பு தவிர மற்ற எல்லாமே நடக்கும் என்று நையாண்டியாக நகைக்கிறார். “ஒரு தடவை செமஸ்டர் தேர்வு சமயத்தில் நண்பர்களோடு சேர்ந்து குரூப் ஸ்டடி செய்யலாம் என்று இரவு 9 மணிக்கு நண்பனின் வீட்டில் கூடினோம். இரவு முழுவதும் படிப்பதாகக் கூறிப் பேச்சு மட்டும்தான் நடந்தது.

காலை என் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். இரவு முழுவதும் அடித்த அரட்டையால் தேர்வு அன்று வீட்டில் தூங்கி விட்டேன். பிறகென்ன எல்லாம் போச்சு அரியர் வைத்ததுதான் மிச்சம்” என்று சோர்ந்து போகிறார்.

ஃபீல் பண்ணாதீங்க, அதை அடுத்த குரூப் ஸ்டடியில் படித்துக் கொள்ளலாம் பாஸ்!

குரூப் ஸ்டடியில் தனி டெக்னிக்

நாங்களும் குரூப் ஸ்டடி பண்ணுவோம் என்று தானாக முன் வந்து பேசும் பீகே, குரூப் ஸ்டடியில் தனி டெக்னிக்கை பயன்படுத்துகிறார். அதாவது தேர்வு நேரத்தில் வகுப்பில் நன்றாகப் படிக்கும் 4 பேரைத் தேர்வு செய்து குரூப் ஸ்டடி என்ற களத்தில் இறங்குவாராம். அவர்கள் வைத்திருக்கும் குறிப்புகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வாராம்.வகுப்பில் நடத்திய பாடங்களைக் கதை போன்று வாய் வார்த்தையாகக் கேட்டுக் கொண்டு தீவிரமாகப் படித்து எழுதுவாராம்.

கடைசியில் பார்டரில்தான் பாஸ் ஆவாராம். இதை ஆரம்பத்திலே செய்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாமே என்ற கேள்விக்கு “எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் கல்லூரி நாட்களை யார் அனுபவிப்பது?” என்று நம்மைப் பதில் கேள்வி கேட்கிறார்.

இப்படி அடாவடி செய்யும் இவர், ஃபெயிலே ஆனாலும் பிட்டு மட்டும் பார்த்து எழுத மாட்டேன் என்று கொஞ்சம் நேர்மையையும் கடைபிடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x