Published : 28 Jan 2015 12:07 pm

Updated : 28 Jan 2015 13:53 pm

 

Published : 28 Jan 2015 12:07 PM
Last Updated : 28 Jan 2015 01:53 PM

நானும் வெள்ளை மாளிகையும்: ஒபாமாவுடன் ரேடியோ நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை மாளிகைக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்போது நான் வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என நினைத்துகூட பார்க்கவில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆல் இந்தியா ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் முதல் உரையாற்றி வருகிறார்.

அவ்வகையில் நேற்று, அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் மோடி உரையாற்றியபோது, அவருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொண்டார்.

சரியாக இரவு 8 மணியளவில் மோடி, ஒபாமா பங்கேற்ற நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முதலில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, "ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி மொழியில் பராக் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என அர்த்தம். அதேபோல் ஆப்பிரிக்க மொழியில் நாம் இங்கே இருப்பதால் நான் இங்கே இருக்கிறேன் என்ற பழமொழி உண்டு. அது நம் இந்திய கலாச்சாரத்தின் 'வாசுதேவ குடும்பகம்' என்ற கருத்தாக்கத்துக்கு இணையானது.

இத்தருணத்தில் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் குடும்பத்தாருடன் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம். இந்தியா உங்களை எப்போதும் வரவேற்கிறது. நீங்கள் உங்கள் மகள்களை வளர்க்கும் விதம் இந்தியாவின் பேடி பச்சாவ் பேடி படாவ் திட்டத்துக்கு முன் மாதிரியாக விளங்கும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உங்கள் அனைவருடனும் நேரடியாக பேச கிடைத்த வாய்ப்பு அற்புதமானது. இந்திய பிரதமரும் - அமெரிக்க அதிபரும் கூட்டாக கலந்துகொண்டு பேசும் முதல் ரேடியோ உரை என தெரியவந்தது. அதில் பெருமை கொள்கிறேன். இந்தியா - அமெரிக்கா நட்புறவை பலப்படுத்துவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை பாராட்டுகிறேன். அமெரிக்காவில் நான் முன்னெடுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் போன்றே இங்கு மோடியும் செய்து வருகிறார்" என்றார்.

கேள்வி: ராஜ் - மும்பை - இந்திய பயணத்தின் அனுபவத்தை உங்கள் மகள்களுடன் எப்படி பகிர்ந்து கொள்வீர்கள்?

பதில்: ஒபாமா - என் மகள்கள் என்னுடன் இந்தியா வர விரும்பினார்கள். ஆனால், அவர்களுக்கு பள்ளி விடுமுறை இல்லை. அவர்கள் எப்போதுமே இந்திய கலாச்சாரம், வரலாற்றைக் கண்டு வியந்துள்ளனர். எனவே இந்தியா நீங்கள் கற்பனை செய்ததுபோன்றே பிரம்மாண்டமான தேசம் எனக் கூறுவேன்.

கேள்வி: ஹிமானி - லுதியானா - நீங்கள் இருவரும் இன்று நீங்கள் அடைந்துள்ள பதவியை எட்டுவீர்கள் என கற்பனை செய்திருக்கிறீர்களா?

பதில்: ஒபாமா - நான் முதன்முதலில் வெள்ளை மாளிகையின் தடுப்பு வேலி அருகே நின்றபோது அங்கே வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமென நினைக்கவில்லை.

பதில்: மோடி - ஒபாமா கூறியதுபோல், முதன்முதலாக வெள்ளை மாளிகை முன் நின்றபோது நான் கற்பனைகூட செய்யவில்லை, எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என. ஆனால் அது நடந்தது. மிகச் சாதாரண சூழலில் இருந்துவந்த எனக்கும், ஒபாமாவுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேள்வி: ஓம் பிரகாஷ் - ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் - புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் உலகத்தின் குடிமக்கள். அவர்களுக்கு கால எல்லையோ நிலப்பரப்பு எல்லைகளோ கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் நமது தலைவர்கள், அரசாங்கங்கள், சமுதாயம் ஆகியவற்றின் அணுகுமுறை இளைஞர்களிடம் எப்படி இருக்கும்?

பதில்: ஒபாமா - அரசாங்கங்களும், தலைவர்களும் மேலிருந்தபடி எளிதாக ஆட்சிசெய்ய முயற்சிக்க முடியாது. ஆனால் வெளியில் வந்து எல்லோரையும் உள்ளடக்கிக்கொண்டு அரவணைத்து வெளிப்படையான வழியில் தேசம் போக வேண்டிய திசையைப் பற்றி குடிமக்களுடன் கலந்துபேசிட வேண்டும். இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு தேசங்களுக்கும் உள்ள சிறப்பு இரண்டு சமூகங்களும் வெளிப்படையான சமூகங்கள் என்பதே.

பதில்: மோடி - இந்த கோஷம் பல ஆண்டுகளாக நிலவி வந்தது. இன்றைய உலக இளைஞர்களின் சக்தி, இன்றைய உலக இளைய சமுதாயத்தின் வீச்சு ஆகியவற்றைப் பார்க்கும் போது, இளைஞர்களே, உலகத்தை ஒன்று படுத்துங்கள் என்று நான் கூற விரும்புகிறேன். அவர்களிடம் உலகை இணைக்கும் ஆற்றலும் இருக்கிறது, அவர்களால் இதைச் செய்யவும் முடியும்.

கேள்வி: உங்களை மிகவும் கவர்ந்த அமெரிக்க தலைவர் யார்?

பதில்: மோடி - பெஞ்சமின் பிராங்க்ளின் என எப்போதுமே கூறுவேன். ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அவர் மிகப்பெரிய அரசியல் மேதை.

கேள்வி: மோனிகா - பொருளாதார வல்லமை கொண்ட இரண்டு பெரிய தேசங்களின் தலைவர்களாகிய உங்களுக்கு மிக மோசமான ஒரு வேலை நாளில் புன்னகையை வரவழைத்துக் கொள்வதற்கு எது காரணமாக இருக்கிறது.“ என்பது கேள்வி.

பதில்: ஒபாமா - இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. “என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கீறிர்கள்?” என்று சொல்லக் கூடிய ஒருவரை தினந்தோறும் நான் சந்திக்கிறேன். அவர்கள் சொல்வார்கள் : உடல் நலம் பேணுவது தொடர்பாக நீங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டம் என்னுடைய குழந்தையை காப்பாற்றி இருக்கிறது. அவனுக்கு ஆரோக்கியக் காப்பீடு ஏதும் இல்லை” என்று. வேறு சிலர் சொல்வார்கள் : பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எனது வீட்டை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் உதவீனீர்கள் என்று. கடினமான பணி எது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கிடையிலும் இடையறாது பணிபுரிவதனால் நல்ல மாற்றத்தை உங்களால் உருவாக்க முடியும்.

பதில்- மோடி: உண்மையிலேயே பராக் தனது மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார். எந்தப் பதவியை வகித்தாலும், நாங்கள் முதன்மையாக மனிதர்களே. இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள் தான் எங்களுக்கு கருத்தூக்கம் அளிக்கின்றன.

நிறைவாக பேசிய மோடி, "எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு எண்ணத்தை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எனக்கும் பராக்குக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலை ஒரு e-bookஆக, அதாவது ஒரு மின்னூலாக வெளியிட வேண்டும். மனதின் குரலை ஒலிக்க ஏற்பாடு செய்பவர்களே இதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனதின் குரலைக் கேட்ட நேயர்கள் அனைவரும் இதில் பங்கு பெறுங்கள், உங்கள் எண்ணைங்களைத் தெரிவியுங்கள். இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 100 கருத்துக்கள், நானும் பராக்கும் பங்கு பெறும் புத்தகத்தில் இணைக்கப்பட்டு, ஒரு மின்னூலாக வெளியிடப்படும். ட்விட்டர், ஃபேஸ்புக், போன்றவை வாயிலாக வலைத்தளத்தில் தெரிவிக்க நினைக்கும் கருத்துக்களை, நீங்கள் ஹேஷ் யெஸ் வீ கேன் என்ற ஹேஷ்டேகில் பதிவு செய்யுங்கள்" என்றார்.

ஒபாமாமோடிமன் கி பாத்ரேடியோவில் உரை

You May Like

More From This Category

More From this Author