

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவை நேற்று தொடங்கியது. புது டெல்லியில் இருந்து மும்பைக்கு தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது விஸ்தாரா. இப்போதைய சூழ்நிலைக்கு எது தேவையோ அதைச் செய்வோம் என்று நிறுவனத்தின் தலைவர் பிரசாத் மேனன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும், சர்வதேச தரமுடைய விமான சேவையை வழங்க வேண்டும் என்பது டாடா குழுமத்தின் நீண்ட நாள் கனவாகும். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. இந்த நாளை எங்களது மறைந்த முன்னாள் தலைவர் ஜே.ஆர்.டி. டாடாவுக்கு சமர்ப்பிப்பதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.
டாடா குழுமம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விமானத்துறையில் நேரடியாக களம் இறங்குகிறது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 30 சதவீத பங்குகள் டாடா குழும வசம் இருந்தாலும், தினசரி செயல்பாடுகளில் டாடா குழுமம் பங்கேற்பதில்லை.
போட்டிகளை பற்றிக் கவலைப் பட கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கும், மேலும் விமானத்துறையில் இந்த போட்டி வாடிக்கையாளர்களுக்கு நல்லது என்றார் விஸ்தாரா நிறுவனத்தின் தலைவர் பிரதீப் மேனன்.
இந்தியாவில் செயல்படத் தொடங்கும் மூன்றாது முழுவிமான போக்குவரத்து நிறுவனம் (full-service carrier) விஸ்தாரா ஆகும். அதாவது உணவு, கால் வசதி, பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகள் இந்த விமானத்தில் இருக்கும். விஸ்தாராவுக்கு முன்பு ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே முழு சேவையை வழங்கி வருகின்றன.