

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.15,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. உலகளாவிய மூலதன அதிகரிப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த பங்கு வெளியீடு இருக்கும். இந்த வெளியீட்டில் உரிம பங்குகளும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. இயக்கு நர்கள் குழு கூட்டத்தில் வங்கியின் மூலதனத்தை உயர்த்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது ஆர்பிஐ அனுமதி கிடைத்ததும் மூலதனத்தை 15 ஆயிரம் கோடி உயர்த்திக் கொள்ள உள்ளது.
இந்த 15 ஆயிரம் கோடியை பொதுப்பங்கு மூலம் திரட்ட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. வங்கி எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான மூலதனம் தேவையாக இருக்கிறது என்றும், சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு இந்த மூலதனத் திரட்டல் அவசியம் என்றும் கூறியுள்ளது.
இந்த மூலதனத் திரட்டலை பொதுப் பங்கு வெளியீடு மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. தகுதியான நிறுவனங்கள், உரிமை பங்கு, தனியார் மூலம் திரட்டுவது, உலகளாவிய முதலீட்டு ரசீது, அமெரிக்க முதலீட்டு ரசீது உள்ளிட்ட பல வழிகளில் இந்த மூலதன திரட்டல் இருக்கும் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
வங்கிகளின் மூலதன அதிகரிப்பு விதிகளின் படி வங்கிகள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எஸ்பிஐ யின் 58.60 சதவீத பங்குகள் மத்திய அரசு வைத்துள்ளது. எஸ்பிஐ பங்கின் விலை தற்போது ரூ.331.40 என்கிற நிலையில் வர்த்தகம் ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.8,032 கோடி மூலதனத்தை எஸ்பிஐ திரட்டியது. தகுதியான நிறுவனங்கள் வழி இந்த மூலதனத்தை எஸ்பிஐ திரட்டியது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் அரசு ரூ.2,000 கோடி எஸ்பிஐக்கு வழங்கியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பல்வேறு அரசு பொதுத்துறை வங்கிகளுக்காக ரூ.11,200 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கும் செய்யப்படுகிறது. மேலும் இந்த அறிக்கை தற்போதுதான் வெளிவந்துள்ளது, எத்தனை பரிவர்த்தனைகள், விலை நிர்ணயம், பணியாளர்களுக்கான ஒதுக்கீடு போன்றவை பின்னர் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமென தெரிகிறது. இதனால் நேற்றைய பங்கு வர்த்தகத்தில் எஸ்பிஐ பங்கு விலை 1.38 சதவீதம் உயர்ந்தது.
கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் எஸ்பிஹெச்
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.400 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த நிதி திரட்டல் இருக்குெமன வங்கியின் இயக்குநர் சாந்தனு முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை இந்த இந்த நிதி திரட்டல் இருக்கும் என்றும், சந்தையின் நிலைமை மற்றும் தேவைக்கு ஏற்ப இது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.