

காப்பீடு மற்றும் நிலக்கரித்துறை சீர்த்திருத்தம் தொடர்பான மசோதாவை நடந்து முடிந்த குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தும் காப்பீட்டு மசோதா கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் நிறை வேற்றப்படாமல் இருக்கிறது.
அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துவதன் மூலம் இந்த துறைக்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அந்நிய நேரடி முதலீடு வரம்பு 26 சதவீதமாக இருப்பதால் அந்நிய நேரடி முதலீடு 8,700 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது.
மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட முடியாமல் எதிர்க் கட்சிகள் முடக்கியதால் இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந் தது. நிலக்கரி மசோதா நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொட ரில் மக்களவையில் நிறைவேறி யது. ஆனால் மாநிலங்களவையில் தடைபட்டது.
காத்திருக்க முடியாது!
ஒரு அவை தொடர்ந்து செயல்படாமல் முடக்கப்பட்டிருந் தாலும், அதற்காக காத்திருக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மாநிலங்களவை யில் காப்பீடு மசோதா தொடர்ந்து முடக்கப்படும் பட்சத்தில் நாடாளு மன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடத்தி இந்த மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு தயங்காது என்று தெரிவித்தார்.
சீர்திருத்தங்களை நிறைவேற்ற மத்திய அரசு தீர்க்கமாக இருக் கிறது. அவரவர் சொந்த காரணங் களுக்காக மாநிலங்களவையை முடக்குவதால் காத்திருக்க முடியாது என்பதை முதலீட்டாளர் களுக்கு தெரிவித்துக் கொள்கி றோம் என்றார்.
குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த மறுதினமே இந்த அவசர சட்டம் கொண்டுவந்ததன் காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல வருட காலமாக மசோதா கிடப்பில் இருக்கிறது, அதனால்தான் இந்த அவசரம் என்று பதிலளித்தார்.
குடியரசு தின சிறப்பு விருந்தி னராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வருகிறார். அதற்குள்ளாக இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றன.
நரேந்திர மோடி பதவி ஏற்றதில் இருந்து பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் இரண்டு மாநிலங்களில் பாஜக வென்றது. மாநிலங் களவையில் பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜேட்லி தெரிவித்தார்.