Last Updated : 04 Dec, 2014 09:30 AM

 

Published : 04 Dec 2014 09:30 AM
Last Updated : 04 Dec 2014 09:30 AM

ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்க விதிமுறைகள் தளர்வு

அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக ரியல் எஸ்டேட் துறையில் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

கட்டுமானத் துறையில் குறைந்த பட்ச கட்டுமான பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விதிமுறை தளர்வுக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. தளர்த்தப்பட்ட விதிமுறைகளை மத்திய தொழில் கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த துறையில் 100 சதவீத அளவுக்கு அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படும் என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு குறைந்து வருகிறது. குறைந்தபட்ச கட்டுமான பரப்பளவு முன்னர் 50 ஆயிரம் சதுர மீட்டராக இருந்தது. இது தற்போது 20 ஆயிரம் சதுர மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச முதலீடு ஒரு கோடி டாலராக இருந்த வரம்பு இப்போது 50 லட்சம் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. டவுன்ஷிப், வீடுகள் கட்டுவது உள்ளிட்டவற்றில் 2005-ம் ஆண்டு முதல் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

தளர்த்தப்பட்ட விதிகளால் கட்டுமானத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது தவிர புதிய துறைகளான வீட்டுமனை, வீடு உள்ளிட்டவற்றிலும் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறிய நகரங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் குறைந்த விலை வீடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டுக் காலம் அதிகபட்சம் 2 ஆண்டுகளாகும். திட்டம் முடிவடைந்த பிறகு முதலீட்டாளர் விரும்பினால் இத்திட்டத்திலிருந்து வெளியேறலாம்.

இது தவிர, சாலை கட்டமைப்பு குடிநீர் விநியோகம், தெரு விளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யலா, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த அந்நிய நேரடி முதலீடு 2010-ம் ஆண்டிலிருந்ந்து படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டது. திருத்தப்பட்ட கொள்கை அறிவிப்பு நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் அறிவிப்பை ஒட்டி மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஒரு திட்டப்பணி தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து 10 ஆண்டுகள் வரை அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்ககலாம். திட்டப்பணி முடியும் கால்ம் வரையில் முதலீடுகளை தொடர்ந்து பெறலாம் என்றும் புதிய விதிமுறை தெரிவிக்கிறது.

இத்துடன் அந்நிய நேரடி முதலீடுகளை மற்றொருவருக்கு அதாவது இந்தியாவைச் சாராத ஒருவருக்கு மாற்ற இப்போது விதுமுறை அனுமதிக்கிறது. ஆனால், இவ்விதம் மாற்றம் செவது அந்த குறிப்பிட்ட திட்டப் பணி முடிவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏற்கெனவே ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பண்ணை வீடுகளை உருவாக்கும் நிறுவனங்கள், மாற்றத்தக்க வர்த்தக மேம்பாட்டுல் ஈடுபட்டுள்ளவற்றில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவடைந்த திட்டப் பணிகள் அதாவது குடியிருப்பு, டவுந்ஷிப், அங்காடி, வணிக வளாகம், வர்த்தக மையம் உள்ளிட்டவற்றில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் விதிமுறை கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x