பணியாளர் குறைப்பு: டிசிஎஸ் தீவிரம்?

பணியாளர் குறைப்பு: டிசிஎஸ் தீவிரம்?
Updated on
1 min read

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை வரும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. இதில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறது டிசிஎஸ். அதே சமயத்தில், இந்த வருடத்தில் புதிதாக 55,000 பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் நடுத்தர வயது பிரிவு நபர்களை டிசிஎஸ் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. 20 வருட அனுபவத்துடன் 25,000-க்கும் மேற்பட்டோர் டிசிஎஸ்-ல் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 3,13,757 நபர்கள் பணியில் இருக்கிறார்கள். 1990-களில் வேலைக்கு சேர்ந்த பல பணியாளர்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளவில்லை. அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று டிசிஎஸ் நினைக்கிறது.

பணியாளர் குறைப்பு குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள பிரிவு தலைவர் அஜோயேந்திர முகர்ஜி கூறியது; தற்போது எடுக்கப்போகும் நடவடிக்கை ஒன்றும் சிறப்பு நடவடிக்கை அல்ல, இது ஒரு தொடர் நடவடிக்கைதான். மேலும் நாங்கள் புதிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல.

வருடம் முழுவதும் தொடர்ந்து நடப்பதுதான். செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது எங்கள் நிறுவனம். அதனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் செயல்பாடும் இங்கு முக்கியம். மேலும் நாங்கள் சம்பள உயர்வு பற்றியும் பேசுவோம். அப்போது பணியாளர்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வது அவசியம்.

மேலும் எவ்வளவு பேரை நீக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. அப்படி இலக்கு வைத் துக்கொண்டு நாங்கள் செயல்படவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in