

காப்பீடு மற்றும் நிலக்கரி அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இந்த இரு மசோதாவும் எதிர்கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால் இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன.
மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதாவை கடந்த குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் கடந்த புதன் கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூடி அவசர சட்டம் பிறப்பிக்க முடிவெடுத்தது.
இந்த அவசர சட்டம் பிறப்பித்ததன் மூலம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு நடைமுறைகள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் இந்த மசோதா நிறை வேறும் என்று தெரிவித்தார்.
நிலக்கரி ஒதுக்கீட்டுக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதற்கான இணைய தளமும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 24 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் நடக்க இருக்கிறது. முதல் கட்டமாக 24 நிலக்கரி சுரங்க ஏலம் நடக்க இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கு சாதகமானது. இதன் மூலம் மின் கட்டணங்கள் குறையும் என்று மத்திய நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.