

அதானி குழுமத்துக்கு 100 கோடி டாலர் கடன் வழங்குவது பற்றி முடிவெடுப்பதற்கு இன்னும் 2 முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த முடிவை வங்கியின் செயல் குழு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சுரங்க திட்டத்துக்காக அதானி குழுமத்துக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,200 கோடி) வழங்க எஸ்.பி.ஐ. வங்கிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா பயணத்தின் போது இந்த இந்த உடன்படிக்கை ஏற்பட்டது.
இந்த கடன் விவகாரம் தொடர் பாக அனைத்து விஷயங்களும் ஆராயப்பட்டுவிட்டது. திட்ட அறிக்கை தொடர்பான விஷயங் களை வங்கியின் செயல் குழு ஆராய்ந்த பிறகு கடன் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்கு 2 முதல் 3 மாதங்கள் வரை ஆகும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பொதுவாக 400 கோடி ரூபாய்க்கு மேலே கடன் வழங்குவதாக இருந்தால் வங்கியின் தலைவர் தலைமையிலான செயல் குழுதான் முடிவு எடுக்கும்.
இதில் வங்கியின் இரண்டு செயல் இயக்குநர்கள், மற்றும் இந்த கூட்டம் நடக்கும் இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் இந்த செயல் குழுவில் உறுப்பி னராக இருப்பார்கள். தவிர ரிசர்வ் வங்கியின் நியமன இயக்குநர் உர்ஜித் பட்டேலும் இந்த குழுவில் இருப்பார். ஆஸ்திரேலியாவில் அமையும் தமது நிலக்கரி சுரங்க திட்டத்துக்காக 300 கிலோமீட்டர் தொலைவுக்கு, 1600 கோடி டாலர் செலவில் ரயில் பாதை அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டிருக்கிறது.
அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ கடன் வழங்குவதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. எந்த தகுதியின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எஸ்பி.ஐ. கடன் வழங்குகிறது. பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்தில் மோடிக்கு அருகில் அமர்ந்திருந்ததால் கடன் கொடுக்கிறதா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதானி குழுமத்துக்கு ஐந்து வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எஸ்.பி.ஐ.க்கும் அதானி குழு மத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது, கடன் வழங்கவில்லை என்று எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.