

வெளிநாட்டு கார்கள் மீது கோடீஸ்வரர்களுக்கு எப்போதுமே பிரியம் அதிகம். தங்களது அந்தஸ்தின் அடையாளமாக இதை அவர்கள் கருதுவதும் இதற்குக் காரணம். இருந்தாலும் நேரடியாக கார்களை இறக்குமதி செய்தால் அதற்கு காரின் விலைக்கு நிகராக இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இதனாலேயே பலர் இப்போது செகன்ட்ஹேண்ட் எனப்படும் இரண்டாம் நிலை சந்தையை நாடுகின்றனர். இதனால் இந்த சந்தையில் வெளிநாட்டு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு முன்னர் 60 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி இப்போது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக புதிய கார்களை வாங்குவதைவிட ஓரளவு உபயோகித்த கார்களை வாங்குவது சிறந்ததாகும். லம்போர்கினி, ஃபெராரி, ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற கார்கள் விலை கோடிக்கணக்கில் உள்ளது.
ரூ. 2 கோடியில் வெளிநாட்டு கார் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். கூடுதலாக ரூ. 50 லட்சம் வரை செலவழிக்கத் தயாராக இருந்தேன். இப்போது ரூ. 2.5 கோடியில் லம்போர்கினி கலார்டோ கிடைத்துள்ளது. புதிதாக வாங்க வேண்டுமென்றால் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் செலவழித்திருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு பணம் மிச்சம் என்கிறார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்.
இந்த கார் புதிதாக வாங் கினால் எப்படியிருக்குமோ அதேபோல் இருக்கிறது. 3 ஆயிரம் கிலோமீட்டர்தான் ஓடியுள்ளது.இதன் முந்தைய உரிமையாளர் இதை மிக அழகாக பராமரித்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் குறிப் பிடுகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர், தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் சொகுசு வெளிநாட்டு கார்களின் விற்பனை குறைந்து வருகிறது. 2011-ம் ஆண்டு 200 கார்கள் விற்பனையானது. ஆனால் நடப்பாண்டில் 120 ஆகக் குறைந்துள்ளதாக கார் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேசமயம் குறைவாக வரிவிதிப்பு இருந்தபோது வாங்கியவர்கள் இப்போது விற்பனை செய்யும்போது அது லாபகரமாக உள்ளது. 2010-ம் ஆண்டு ஃபெராரி 45பி காரை ரூ. 1.80 கோடிக்கு வாங்கிய ஒருவர் அதை தற்போது ரூ. 4 கோடிக்கு விற்பனை செய்துள் ளார். இதோபோல லம்போர்கினி கல்லார்டோவை ரூ. 2.90 கோடிக்கு வாங்கி அதை ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியிலும், வர்த்தக நகரான மும்பையிலும் வெளிநாட்டு கார்களை பயன்படுத்தும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.