

ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் 5.67 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
மேலும், இதுவரையில் நேரடி வரி வசூல் 3.29 லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மறைமுகவரி 7.1 சதவீதம் உயர்ந்து 3.28 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது என்றார்.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நேரடி மற்றும் மறைமுகவரி ரூ. 6.58 லட்சம் கோடி வசூல் ஆகி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 13.6 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக நேரடி வரியில் 16 சதவீத வளர்ச்சியும், மறைமுக வரியில் 20 சதவீத வளர்ச்சியும் இருக்க வேண்டும்.
நேரடி வரி வசூல் இலக்கு 7.36 லட்சம் கோடி ரூபாயாகவும், மறைமுக வரி வசூல் இலக்கு 6.24 லட்சம் கோடி ரூபாயாகவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் நாட்டின் வளர்ச்சி விகித்தை பொறுத்து இருக்கும் என்றும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
ரூ.1.06 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி
கடந்த ஐந்தாண்டுகளில் 1.06 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் தள்ளுபடி (write off) செய்திருப்பதாக வேறு ஒரு கேள்விக்கு ஜெயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். மேலும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியின் டேட்டா குவியலில் இருந்து எடுக்க முடியவில்லை என்றும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் 1.06 லட்சம் கோடியாக இருந்தாலும், மார்ச் 2014-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் 42,447 கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய இரண்டு நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த தொகை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.
பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் வாராக்கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் தகவல் படி 2011-12-ம் நிதி ஆண்டில் 20,752 கோடி ரூபாய், 2012-13ம் நிதி ஆண்டில் 32,992 கோடி ரூபாய் மற்றும் 2013-14-ம் ஆண்டு இந்த தொகை 42,447 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாத 1,600 நபர்களின் பட்டியல் வங்கிகளின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. (இவர்கள் வாங்கிய கடன்கள் அளவு தலா 25 லட்சம் ரூபாய்க்கு மேல்.)
ரீடெய்ல் அந்நிய முதலீடு
ரீடெய்ல் (ஒரு பிராண்ட்) துறையில் மட்டும் இந்தியாவுக்கு 25.9 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து இந்த தொகை இந்தியாவுக்கு வந்திருக்கிறது. ஒரு பிராண்டு ரீடெய்ல் பிரிவில் 100 சதவீத அந்நிய முதலீடும், பல பிராண்ட் ரீடெய்ல் பிரிவில் 51 சதவீத அந்நிய முதலீடும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 16.7 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 1.1 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.