

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, தனது பழைய விமானங்களை குத்தகைக்கு (லீஸ்) விட்டு வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளது.
தன் வசமுள்ள ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களில் 14 விமானங்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. குத்தகைக் காலம் 6 ஆண்டுகளாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 29 ஆகும்.
அதே சமயம் புதிய விமானங்களை குத்தகை அடிப்படையில் எடுத்து இயக்க முடிவு செய்து அதற்கான டெண்டர்களையும் ஏர் இந்தியா கோரியுள்ளது. ஏ320 ரக விமானங்களை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. 1989 முதல் 1993-ம் ஆண்டு வரையான காலத்தில் மொத்தம் 31 விமானங்கள் வாங்கப்பட்டன. 2006 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 43 விமானங்கள் வாங்கப்பட்டன.
கடந்த ஆண்டு 777-200 ரக 5 விமானங்களை அபுதாபியிலிருந்து செயல்படும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது ஏர் இந்தியா. விரைவிலேயே எஞ்சியுள்ள 777-200 ரக 3 விமானங்களை விற்பனை செய்யப் போவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.