2014-ம் ஆண்டு அதிக லாபம் ஈட்டியவர்கள்: முதலிடத்தில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா

2014-ம் ஆண்டு அதிக லாபம் ஈட்டியவர்கள்: முதலிடத்தில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா
Updated on
1 min read

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, இந்த ஆண்டு அதிக லாபம் அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசிரியராக இருந்து தொழில் முனைவோராக மாறி இப்போது சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனமாக அலிபாபா திகழ்வதற்குக் காரணமானவர் ஜாக் மா. இவரது வருமானம் 1,850 கோடி டாலரிலிருந்து 2,920 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இவரது சொத்துமதிப்பு 173 சதவீதம் உயர்ந்துள்ளது.

வெல்த் எக்ஸ் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில் வாரன் பஃபெட் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரது வருமானம் 23 சதவீதம் உயர்ந்து 7,260 கோடி டாலரைத் தொட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நிகர சொத்து மதிப்பு 2014-ம் ஆண்டு 1,050 கோடி டாலராக உயர்ந்து 8,310 கோடி டாலராக இருக்கிறது. இவர் வெல்த் எக்ஸ் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

ஃபேக்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜுகர்பெர்க் நான்காம் இடத்திலும் தொலைத் தொடர்பு நிறுவனமான ஆல்டிஸ் நிறுவனர் பாட்ரிக் டிராகி ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

மிகப் பெருமளவில் சொத்துகளை இழந்தவர்கள் பட்டியலில் ரஷியாவின் எரிவாயு நிறுவனர் மெக்லீசன் சொத்து மதிப்பு 1,000 கோடி டாலராக சரிந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நோவாடெக் நிறுவனப் பங்குகள் 700 கோடி டாலர் வரை(41 சதவீதம் சரிந்தது) நஷ்டமடைந்தன. இதனால் மெக்லீசன் பின்னடைவை சந்தித்துள்ளார். ரஷிய கரன்சியின் மாற்று மதிப்பு சரிந்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது ஆகியன இந்நிறுவன சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும்.

2014-ம் ஆண்டில் மிகப் பெரும் சரிவைச் சந்தித்த ஐந்து பேர் பட்டியலில் சாஃப்ட்பேங்க் தலைமைச் செயல் அதிகாரி மஸாயோஷியின் சொத்து மதிப்பு 590 கோடி டாலர் சரிந்து 1,320 கோடி டாலராகக் குறைந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பியோஸின் சொத்து மதிப்பு 550 கோடி டாலர் சரிந்து 2,890 கோடி டாலராக உள்ளது.

வெல்த் எக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் அதிக முதலீடு செய்யும் தனி நபர்களின் சொத்து விவரங்கள் பட்டியலை துல்லியமாக வைத்துள்ளது. இந்நிறுவனப் பட்டியிலில் 3 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துகளை வைத்திருப்போர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in