Published : 02 Dec 2014 10:32 AM
Last Updated : 02 Dec 2014 10:32 AM

அதிகரித்த வாகன விற்பனை: ஏற்றம் கண்ட மாருதி, ஹோண்டா நிறுவனங்கள்

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை நவம்பர் மாதத்தில் ஏறுமுகமாக இருந்தது. சில நிறுவனத் தயாரிப்புகள் மட்டும் சரிவைச் சந்தித்தன. மாருதி மற்றும் ஹோண்டா, அசோக் லேலாண்ட் நிறுவனங்கள் கணிசமான ஏற்றத்தையும், ஜெனரல் மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் விற்பனைச் சரிவையும் கண்டுள்ளன.

மாருதி

உள்நாட்டு கார் விற்பனை சந்தையில் நவம்பர் மாதம் மாருதி 19.5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தம் 1,10,147 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் மொத்தம் 92,140 கார்களை விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி 53 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 10,123 கார்கள் ஏற்றுமதியானது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 6,630 கார்களே ஏற்றுமதியாகியிருந்தது.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா கார் விற்பனை 33 சதவீத சரிவைக் கண்டுள்ளது. மொத்தம் 4,157 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 6,214 கார்களை விற்பனை செய்திருந்தது.

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் நவம்பர் மாதத்தில் 8.7 சதவீத வளர்ச்சியைப் பார்த்துள்ளது. இது 54,011 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 49,681 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி சற்று அதிகரித்தத 18,500 கார்கள் ஏற்றுமதியானது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 16,180 கார்களே ஏற்றுமதியானது.

டொயோடா

டொயோடோ தனது நவம்பர் மாத விற்பனையில் 11% வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தம் 14,134 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு 12,748 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் 1,959 எடியோஸ் கார்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் வாகன விற்பனை 44 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தம் 7,732 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,375 வாகனங்களே விற்பனையானது. கன ரக வாகன விற்பனை 92 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் இலகு ரக வாகன விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

இந்நிறுவன வாகன விற்பனை 13 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 34,292 வாகனங்கள் விற்பனையாயின. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 39,254 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி 27 சதவீதம் சரிந்ததில் 2,192 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுமதி வாகன எண்ணிக்கை 2,993 ஆகும்.

ஹோண்டா

ஹோண்டா கார்களின் விற்பனை 64 சதவீதம் அதிகரித்ததால் 15,263 கார்கள் விற்பனையாகியுள்ளன. தபுகரா தொழிற்சாலையில் இரண்டாவது ஷிப்ட் உற்பத்தி மற்றும் டீலர்கள் நெட்வொர்க்கை அதிகப்படுத்தியதும் விற்பனை உயர்வுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார் இதன் மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் துணை தலைவர் ஜானேஷ்வர் சென்

டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை 36 சதவீதம் அதிகரித்து 2,20,046 ஆக உள்ளது. கடந்த நவம்பரில் இது 1,61,908 ஆக இருந்தது. ஸ்கூட்டர் 62 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நவம்பரில் 38,331 ஆக இருந்த ஸ்கூட்டர் விற்பனை இப்போது 62,223 ஆக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை 41 சதவீதம் உயர்ந்ததில் 86,424 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளன.

ராயல் என்ஃபீல்டு

ஐஷர் குழுமத்தைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவன வாகன விற்பனை நவம்பரில் 27,542 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 52 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 18,131 மோட்டார் சைக்கிளை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இருப் பினும் ஏற்றுமதி சரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x