

எரிபொருள் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கு பணம் இல்லாததால், ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நேற்று காலை முதல் மாலை வரை முடங்கியது. மாலை நான்கு மணிக்கு போக்குவரத்து தொடங்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஇஓ) சஞ்ஜீவ் கபூர் தனது டிவிட்டர் இணையதளத்தில் தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையில் முன்பணம் கொடுத்திருக்கிறோம் என்று ஸ்பைஸ் ஜெட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் மாலை முதல் விமானங்கள் வழக்கம் போல செயல்பட்டன.
ஸ்பைஸ்ஜெட் பணம் கொடுத்ததை எண்ணெய் நிறுவன அதிகாரியும் உறுதிபடுத்தினார். மேலும் நாங்கள் எரிபொருள் கொடுக்க முடியாது என்று சொல்லவில்லை. ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வரவில்லை, அதனால் நாங்கள் கொடுக்கவில்லை. மதியம் விமானங்கள் வந்தது, எரிபொருள் நிரப்பப்பட்டது என்று தெரிவித்தார்.
போக்குவரத்து நிறுத்தப்பட்ட தால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முன் பதிவு செய்திருந்த பலரும், ஒவ்வொரு விமான நிலையத்திலும் காத்திருந்தனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பும் ஸ்பைஸ்ஜெட் கேட்டிருந்தது.
கடந்த ஆறு மாதங்களாகவே உடனுக்குடன் பணம் கொடுத்து தேவையான எரிபொருளை வாங்கிவந்தது. இந்த நிலைமையில் நேற்றைய எரிபொருளுக்கு பணம் இல்லாததால் விமான போக்குவரத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது.
ஒவ்வொரு நாளும் 250 போக்குவரத்தை ஸ்பைஸ்ஜெட் கையாளுகிறது. இதற்கு எரிபொருள் செலவாக ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 14 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே நிறுவனத்தின் புரமோட்டார்கள் கொடுத்த உறுதிகாரணமாக, வங்கிகள் 600 கோடி ரூபாய் வொர்கிங் கேபிடலுக்கு கடனாக கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் நீண்ட கால கடன் கிடைத்த பிறகு இந்த கடனை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
மேலும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவதற்கும் (இசிபி முறையில்) நிதி அமைச்சகம் அனுமதி கொடுத்திருந்தது.
15 நாட்களுக்கான செயல்பாட்டு திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துவிட்டதால் நிதி அமைச்சகம் இந்த நிதி திரட்டலுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
நிறுவனர்களிடம் போதுமான அளவு பணப்புழக்கம் இல்லாததால் மேலும் முதலீடு செய்யமுடியாது. அதனால் வங்கியை நாடி இருக்கிறோம். அதற்குத் தேவையான உத்தரவாதத்தை நிறுவனர்கள் கொடுக்க முடியும், இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல். நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 310 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்தது. இப்போதைக்கு 26 விமானங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. முன்னர் 35 விமானங்கள் செயல்பாட்டில் இருந்தன.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஸ்பைஸ்ஜெட் பங்கு 5.4 சதவீதம் சரிந்து 13.15 ரூபாயில் முடிவடைந்தது.