பங்குச் சந்தையில் 154 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் 154 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 154 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 27395 புள்ளிகளானது. உலோகத் துறை, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருள் தயாரிப்பு துறைகளின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் 45 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட் டெண் 8246 புள்ளிகளானது.

வரும் நிதி ஆண்டில் அதாவது 2015-16-ல் இந்தியாவின் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பங்குச் சந்தையில் புள்ளிகள் உயரக் காரணமாக அமைந்தது. கடந்த 12 வர்த்தக தினங்களில் பங்குகளை விற்று வந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திங்கள்கிழமை பங்குகளை வாங்கத் தொடங்கின. இதுவும் புள்ளிகள் அதிகரிக்கக் காரணமானது. மொத்தம் ரூ. 39.97 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.

இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நிறைவேற்றும் என்பதால் உலோகத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. எம்எம்ஆர்டிஏ சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அரசு அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆசிய பிராந்தியத்தில் சீன அரசு பொருளாதார ஊக்குவிப்புக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டது ஆசிய பிராந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, பிஹெச்இஎல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. இருப்பினும் பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்தம் 1,617 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,307 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 112 நிறுவனப் பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மொத்த வர்த்தகம் ரூ. 2,260 கோடியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in