

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் அஜய் சிங், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வாங்குவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிகிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் கடன்களை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து அவர் தீரஆராய்ந்து வருவதாக, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்தார்கள்.
முன்னாள் நிறுவனர் அஜய் மற்றும் இரண்டு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து இன்னும் 4 முதல் 6 வாரத்தில் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இவர்கள் முதலீடு செய்வதாக முடிவெடுத்து, அந்த முடிவு ஏற்கப்படும்பட்சத்தில், கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் ஈடுபட மாட்டார் என்றும் தெரிகிறது.
இந்த விஷயம் குறித்து அஜய்யிடம் கருத்து கேட்க முடியவில்லை. ஆனாலும் விமான எரிபொருள் விலை குறைந்துவருவது, இந்தியாவின் சந்தை மதிப்பு அதிகரித்து வருவது மற்றும் புதிய அரசு மத்தியில் அமைந்திருப்பது ஆகிய காரணங்களால் இந்த நிறுவனத்தை அஜய் சிங் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஷயம் அறிந்தவர்கள் தெரிவித்தார்கள்.
சம்பந்தப்பட்ட இரு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களில் ஒரு முதலீட்டாளருக்கு ஏற்கெனவே விமான போக்குவரத்து துறையில் முதலீடு செய்த அனுபவம் இருக்கிறது. அவர் இந்திய சந்தையில் முதலீடு செய்ய தயாராகவே இருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.எல்.நாராயணனை அஜய் சந்தித்ததாக சன் டிவி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.