

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் ஆண்டு தோறும் 40 சதவீதம் வீணடிக்கப்படுவதாக பிரிட்டனை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர்கள் மையம் (ஐஎம்இ) நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. உணவுப் பொருட்களை கையாளுவதில் குறைபாடுகள், குளிர்பதன கிடங்குகள் இல்லாமல் இருப்பது, விநியோகக் குறைபாடுகள் மற்றும் உற்பத்தி செய்யும் இடத்திற்கும் சந்தைக்கும் உள்ள தூரம் போன்ற காரணங்களால் இந்த இழப்பு ஏற்படுகிறது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
ஐ.என்.இ. நிறுவனத்தின் சுற்றுப்புற சுழல் பிரிவின் தலைவர் டிம் பாக்ஸ், உணவு வீணாவது மிகப்பெரும் சோகம் என்று குறிப்பிட்டார். நுகர்வோருக்கு செல்வதற்கு முன்னரே 40 சதவீத உணவுப் பொருட்கள் இந்தியாவில் வீணாகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஏழைகளுக்கும் இந்த உணவு போய் சேர்வதில்லை, இப்படி வீணாகும் உணவின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 750 கோடி டாலர் என்றும் கூறியுள்ளார். இவ்வளவு தொகை ஒவ்வொரு வருடமும் வருமான இழப்பாக மாறுகிறது என்றார்.
குளிர்பதன கிடங்குகளை நாடு முழுவதும் அமைப்பதன் மூலம் இந்த பொருளாதார சீர்கேட்டை தடுக்க முடியும் என்றார். இந்திய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 53 சதவீதம் விவசாய துறையை சார்ந்து உள்ளது, இந்திய ஜிடிபியில் 15 சதவீதம் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பால், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது அந்த நிறுவனம். இந்தியாவுக்கு 6.6 கோடி டன் குளிர்பதன கிடங்குகளுக்கான தேவை இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதில் பாதியளவு மட்டுமே கிடங்குகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
பருவ கால சூழ்நிலைகள் மாறிவருவதினால் இந்தியாவின் உற்பத்தி பாதிப்படைகிறது. அதே சமயத்தில் இதே காரணத்தால் உணவுப் பொருள்கள் வீணாவது இந்தியாவுக்கு இரட்டை இழப்பு, இதை மரபு சாரா எரிசக்தி மற்றும் கிரையோஜினிக் தொழில்நுட்பம் மூலம் ஈடுகட்டலாம் என்றார்.