

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமை யாக சரிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 28000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. 27797 புள்ளியில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல நிப்டியும் 97 புள்ளிகள் சரிந்து 8341 புள்ளியில் முடிவடைந்தது.
காரணம் என்ன?
பங்குச்சந்தைகள் சரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டாம் காலாண்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவின் காம்போசிட் இண்டெக்ஸ் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் சரிவது இப்போதுதான். இதனால் ஹாங்செங் குறியீடும் 2.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. மேலும் முதலீட்டாளர்களின் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்தாலும் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.
துறைவாரியான நிலவரம்
அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன.குறிப்பாக மின்சாரம், உலோகம், கட்டுமானம் மற்றும் பொதுத்துறை குறியீடு அதிகமாக சரிந்தது. அதிகபட்சமாக மின் துறை குறியீடு 2.75 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. மேலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, எம் அண்ட் எம் மற்றும் டிசிஎஸ் பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிவடைந்தன. ஓ.என்.ஜி.சி. பங்கு கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து முடிந்தது. மெக்யாரெ நிறுவனம் இந்த பங்குக்கான இலக்கு விலையை குறைத்து பரிந்துரை செய்ததால் 4 சதவீத அளவு இந்த பங்கு சரிந்தது.
திங்கள் கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 4,984 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள்.
கச்சா எண்ணெய் நிலவரம்
பிரென்ட் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து ஒரு பீப்பாய் 66 டாலர் அளவுக்கு சரிந்தது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 43 சதவீதம் அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் சரிந்தது.