Last Updated : 13 Dec, 2014 03:04 PM

 

Published : 13 Dec 2014 03:04 PM
Last Updated : 13 Dec 2014 03:04 PM

தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி

உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச் சத்தை மிகுதியாகக் கொண்டுள்ள ஸ்பைருலினா சுருள்பாசியைக் குறைந்த செலவில் வளர்த்து, அதிக வருமானத்தைப் பெறலாம்.

புரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு தொழில் மூலம் வளர்ப்பதற்கு பிளான்டெனிஸ் வகை உகந்தது.

ஊட்டம் அதிகம்

ஸ்பைருலினாவை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பிரதான உணவாக எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் விற்பனை செய்யலாம். கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றலாம், தாய்ப்பாசியாகவும் விற்கலாம்.

ஸ்பைருலினாவால் மட்டுமே சத்துக் குறைபாட்டை முழுமையாக ஒழிக்க முடியும் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளதால். எதிர்காலத்தில் ஸ்பைருலினாவுக்கு அமோக வரவேற்பு இருக்கும். ஸ்பைருலினாவைப் பெரு முதலாளிகள் தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தாலும், விவசாயிகள் சிறுதொழிலாகச் செய்யவும் ஏற்றது.

தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா பாசி வளர்ப்பு முறையை எளிமையாக விளக்குகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ச. விஜிகுமார்:

வளர்க்கும் முறை

முதலில் சமமான இடத்தில் 18 அடி நீளம், 12 அடி அகலத்துக்குச் சுத்தம் செய்து, அதில் ஒரு இஞ்ச் உயரத்துக்கு மணல் இட வேண்டும். பின்னர், நான்கு புறங்களிலும் 2 அடி உயரத்துக்கு 12 கட்டைகளை ஊன்றி அதன் உள்பகுதியில் தார்ப்பாயை வைத்துக் கட்டைகளில் பாயை ஆணியால் அடித்துத் தொட்டியைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அரை கிலோ கல் உப்பைத் தண்ணீரில் கரைத்துத் தொட்டியில் தெளித்துத் தொட்டியைச் சுத்தம் செய்த பிறகு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட தண்ணீரைத் தொட்டியில் 23 செ.மீ. மீட்டருக்கு விட வேண்டும் (சுமார் 750 லிட்டர்).

பின்னர், 7,500 கிலோ பொட்டாசியம் பை கார்பனேடைத் தொட்டியில் இட்டுத் துடுப்பால் கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 4,750 கிலோ கல் உப்பு, 190 கிராம் யூரியாவை இட்டுக் கலக்க வேண்டும். ஒரு கிலோ ஃபெரஸ் சல்பேட், ஒரு லிட்டர் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தயாரிக்கப்பட்ட ஃபெரஸ் சல்பேட் கரைசலில் இருந்து 47.5 மி.லியும், 49.4 மி.லி. பாஸ்பாரிக் அமிலத்தையும் கையுறை அணிந்து தொட்டியில் கவனமாகத் தெளிக்க வேண்டும்.

தண்ணீரின் பி.எச். அளவு 10.5-ம், தண்ணீரின் அடர்த்தி 1.010-லிருந்து 1.020 வரை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூனம் சேலையை இரண்டாக மடித்து அதில் 750 கிராம் உயிருள்ள தாய்ப்பாசியை இட்டுச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அதைத் தொட்டித் தண்ணீரில் ஆங்காங்கே மூழ்கச் செய்து பாசியை விடவேண்டும். தினமும் 10 முறை கலக்கி விடுவது அவசியம்.

பாசி எடுக்கும் முறை

தொட்டியில் படிந்துள்ள கழிவுகளை அகற்றத் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சேலையைக் கொண்டு இருவர் தொட்டியின் அடிப்பகுதியிலிருந்து அரித்து எடுத்து (துண்டு மூலம் மீன் பிடிப்பது போல) சேலையின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் படியும் கழிவுகளை அகற்ற வேண்டும்.

இறுதியாக 8 - 9-வது நாளில் அறுவடை செய்வதற்குத் தொட்டியின் மேற் பகுதியில் குறுக்காக இரண்டு கட்டைகளை வைத்து அதில் சல்லடையையும் அதன் மேல் சேலை யையும் விரித்து வைத்து, அதன்மீது தொட்டியின் மேல் பகுதியில் மிதக்கும் பாசியை ஜக் மூலம் தண்ணீரோடு எடுத்து ஊற்ற வேண்டும். அப்போது, கழிவுகள் சேலையிலும், பாசி சல்லடையிலும் தங்கிவிடும். தண்ணீர் மீண்டும் தொட்டிக்குச் சென்றுவிடும்.

இதேபோன்று தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுவடை செய்த பிறகு, மீண்டும் முதல்முறையாக இடப்பட்ட ஊட்டத்தின் அளவில் பாதியை இடவேண்டும். அறுவடை செய்யப்பட்ட பாசியைத் தண்ணீர் விட்டுக் கழுவி நிழலில் உலர்த்திக் காயவைத்துப் பயன்படுத்தலாம்.

அறுவடை செய்யப்பட்ட பாசியில் புரதம் 65 சதவீதம் இருந்தால் மனிதப் பயன்பாட்டுக்கும், 65-50 சதவீதம்வரை இருந்தால் கால்நடைகளுக்கும், 50 சதவீதத்துக்குக் குறைவாக இருந்தால் மீனுக்கும் கொடுக்கலாம். பாசியை வேகவைக்கக் கூடாது. சிறுநீரக நோயாளிகளைத் தவிர அனைவரும் இதைச் சாப்பிடலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்குச் சுமார் 500 கிராம் அறுவடை செய்யலாம். கிலோ சுமார் ரூ. 3000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ச. விஜிகுமாரைத் தொடர்புகொள்ள: 99528 86637

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x