Published : 26 Dec 2014 12:42 PM
Last Updated : 26 Dec 2014 12:42 PM

புத்தாண்டின் புது வரவுகள்

புத்தாண்டு பல புது வரவு களுக்கு கட்டியம் கூறுவ தாகத்தான் இருக்கும். இதில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் விதிவிலக்கல்ல. 2015-ம் ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட புதிய ரகக் கார்கள் சந்தைக்கு வர உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் வங்கிகள் வட்டியைக் குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ள வாகனங்களில் மேம்பட்ட மாடல்களையும் புத்தாண்டில் அறிமுகப் படுத்த உள்ளன. இதனால் புத்தாண்டில் கார் விற்பனை 2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டில் எஸ்யுவி எனப் படும் கார்களின் புது வரவு அதிகமிருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள முழுமையான பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புத்தாண்டில் பல புதிய மாடல்களை முகப்படுத்த உள்ளது. ஏற்கெனவே உள்ள மாடல்களில் சிலவற்றின் மேம்பட்ட மாடல்களையும் களமிறக்க திட்டமிட்டுள்ளது. எஸ் 101 என பெயரிடப்பட்ட எஸ்யுவி ரக காரை ஃபோர்டு எகோஸ்போர்ட், ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் சந்தையில் விற்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள தங்கள் தயாரிப்பில் 4 மாடல்களின் மேம்பட்ட ரகத்தை அறிமுகப்படுத்தத் திட்ட மிட்டுள்ளது. கடந்த ஆண்டு 41 சதவீத வாகன சந்தையைப் பிடித்திருந்த இந்நிறுவனம் இந்த ஆண்டு 36 சதவீதமாக சரிந்தது. இந்த சரிவை புத்தாண்டில் புதிய அறிமுகம் மூலம் ஈடுகட்ட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

பியட் ஆட்டோமொபைல் நிறுவனம் பிரபலமான கிராண்ட் செரோஸ்கி மாடல் ஜீப்பை புத்தாண்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதேபோல ஃபோர்டு நிறுவனம் தனது காம்பாக்ட் மாடல் சிறிய ரகக் காரான ஃபிகோ மாடலில் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் போல்ட் எனும் ஹேட்ச்பேக் மாடல் காரை ஆண்டுத் தொடக்கத்திலேயே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனது வாகன விற்பனையை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஜெர்மனியின் சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, 10 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் தனது விற்பனையை அதிகரித்துக் கொள்ள அடுத்த ஆண்டு பிற்பாதியில் எஸ்யுவி ரகக் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்எக்ஸ்4 தளத்தில் மேலும் சில மேம்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x