Last Updated : 10 Dec, 2014 11:06 AM

 

Published : 10 Dec 2014 11:06 AM
Last Updated : 10 Dec 2014 11:06 AM

பெட்ரோல், டீசலுக்கு உற்பத்தி வரி விதிப்பால் அரசுக்கு ரூ.10,500 கோடி கூடுதல் வருவாய்

பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரி கூடுதலாக விதிக்கப்பட்டதால் அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 10,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று எழுத்துமூலமாக அளித்த பதிலில் ஜேட்லி மேலும் கூறியது:

கடந்த நவம்பர் 12 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு தவணைகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. நவம்பர் 12-ம் தேதி உயர்த்தப்பட்டதில் அரசுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதையடுத்து உயர்த்தப்பட்ட வரி விதிப்பால் ரூ. 4,500 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் ரூ.10,500 கோடி வருமானம் நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்றார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் அரசு உற்பத்தி வரியை உயர்த்தியது. உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதால் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வரிச் சுமையை நிறுவனங்களே ஏற்றுக் கொண்டதாக ஜேட்லி கூறினார்.

வரி விதிப்பு ஒப்பந்தம்: மொரீஷியஸ் பரிசீலனை

வரி விதிப்பு ஒப்பந்தம் தொடர் பாக இந்திய அரசு தெரிவித்த சில யோசனைகளை மொரீஷியஸ் அரசு பரிசீலித்து வருவதாக ஜேட்லி கூறினார். இரு நாடுகளிடையிலான வரி விதிப்பு ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து இந்தியா சில ஆலோசனைகளை அளித்தது. அதை அந்நாடு பரிசீலித்து வருகிறது என்றார்.

இரட்டை வரி விதிப்பு முறையில் சுமுக தீர்வு எட்டுவதற்காக ஒரு செயல் குழுவை இரு நாடுகளும் அமைத்துள்ளதாக ஜேட்லி கூறினார். இரு நாடுகளிடையே இதுவரை 10 கூட்டங்கள் நடந்துள்ளன. கடைசியாக ஆண்டு நவம்பரில் கூட்டம் நடைபெற்றது என்று குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பு செய்வோர் மொரீ ஷியஸ் வழியாக இந்தியாவுக்குள் பணத்தைக் கொண்டு வருவதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. இதனால் வரி விதிப்பு தொடர் பாக இரு நாடுகளிடையே எந்தவித சமரசமும் இதுவரை ஏற்படவில்லை. இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்தால் அது இரு நாடுகளிடையிலான முதலீட்டை பாதிக்கும் என மொரீஷியஸ் குறிப்பிடுவதாக ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் மொரீஷியஸும் ஒன்றாகும். கடந்த நிதி ஆண்டில் மொரீஷியஸ் மூலம் 485 கோடி டாலர் தொகை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 419 கோடி டாலர் முதலீடு இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 1.03 லட்சம் கோடி வரிச் சலுகை

கடந்த நிதி ஆண்டில் நிறுவனங்களுக்கு ரூ. 1.03 லட்சம் கோடி வரிச் சலுகை மற்றும் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி கூறினார். 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ. 92,936 கோடி வரிச் சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 81,214 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2010-11) ரூ. 83,328 கோடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2009-10-ம் நிதி ஆண்டில் ரூ. 72,881 கோடி சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேக்க நிலையிலிருந்து தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இச்சலுகை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். லாபத்துடன் இணைந்த பிடித்தம், முதலீடு சார்ந்த பிடித்தம், தேய்மானம், கூடுதல் தேய்மானம் உள்ளிட்ட இனங்களில் இந்தச் சலுகை அளிக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இதேபோன்ற சலுகையை நடப்பு நிதி ஆண்டிலும் நிறுவ னங்கள் அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு நிதி ஆண்டில் அரசு ரூ. 7.36 லட்சம் கோடியை நேரடி வரி விதிப்பு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 6.36 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. மறைமுக வரி மூலம் ரூ. 6.24 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு திரட்டப்பட்டதைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x