இந்திய தொழில்துறை உற்பத்தி கடும் சரிவு

இந்திய தொழில்துறை உற்பத்தி கடும் சரிவு
Updated on
2 min read

இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) அக்டோபர் மாதத்தில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. குறியீட்டெண் மைனஸ் 4.2 சதவீத அளவுக்கு சரிந்தது. தொழில்துறை உற்பத்திக் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 2.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்ஸ்யூமர் டியூரபிள் துறை கடுமையான சரிவைச் சந்தித் துள்ளது. இத்துறையின் உற்பத்தி மைனஸ் 35.2 சதவீதமாக இருந்தது. உற்பத்தித்துறை கடுமை யான சரிவைச் சந்தித்து மைனஸ் 7.6 சதவீத அளவுக்கு கீழிறங்கியது. இத்துறையின் சரிவு ஆண்டுக்காண்டு மைனஸ் 1.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இருப்பினும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) நவம்பர் மாதத்தில் 4.38 சதவீத மாக உயர்ந்துள்ளது. வரும் நிதி ஆண்டில் 6 சதவீதம் முதல் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு அரசு கூடுதலாக செயல்பட்டு வருவதாக முன்னதாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். வளர்ச்சிக்காக சீர்திருத்தங்களை குறிப்பாக காப்பீடு, நிலக்கரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் உள்ளிட்டவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

வளர்ச்சி இலக்கை அடுத்த நிதி ஆண்டில் எட்ட முயற்சிப்போம் என்று குறிப்பிட்ட அவர் அதற்கடுத்த நிதி ஆண்டில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் சீர்திருத்த நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை ஜேட்லி மறுத்தார். உணர்வு பூர்வமான விஷயங்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. பெரியதான மாற்றம் மட்டுமே அவர்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.

கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் தரப்பு ஆலோ சனைகளையும் ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அதன் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். வட்டி குறைப்பு நடவடிக்கை மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்று சுட்டிக் காட்டினார்.

நாளுக்கு நாள் வட்டியைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரிசர்வ் வங்கிக்கு அதிக ரித்து வருகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் ரகுராம் ராஜன் உறுதியாக உள்ளார். பணவீக்கம் குறைந்தால் மட்டுமே வட்டிக் குறைப்பு என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றதிலிருந்து ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படுவதில் உறுதியாக உள்ளார்.

நுகர்வோர் பணவீக்கம் சரிவு

தொடர்ந்து நான்காவது மாதமாக நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் இது 4.38 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் பணவீக்க குறியீட்டெண் 2012-ம் ஆண்டிலிருந்து அரசு வெளியிட்டு வருகிறது. அதிலிருந்து வெளியான அட்டவணையில் இப்போதுதான் மிகக் குறைவான அளவுக்கு பணவீக்கம் இருந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் குறியீட் டெண் 5.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ராய்டர்ஸ் நிறுவனம் 4.5 சதவீத அளவுக்கு இருக்கும் என கணித்திருந்தது. ஆனால் அதைவிடக் குறைவாக பணவீக்க அளவு உள்ளது. நுகர்வோர் உணவு பணவீக்கம் கடந்த மாதம் 3.14 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் இது 5.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in