Published : 08 Apr 2014 10:40 AM
Last Updated : 08 Apr 2014 10:40 AM

ரான்பாக்ஸி பங்குகளை வாங்கியது சன் பார்மா: 400 கோடி டாலருக்கு பரிவர்த்தனை

மருந்து பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சன் பார்மா நிறுவனம் மற்றொரு மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸியின் அனைத்து பங்குளையும் வாங்கியுள்ளது. மொத்தம் 400 கோடி டாலருக்கு (ரூ. 25 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் கையெழுத்தானதாக இரு நிறுவ னங்களும் தெரிவித்துள்ளன. பங்குகளை 320 கோடி டாலருக்கு வாங்கவும் ரான்பாக்ஸிக்கு உள்ள 80 லட்சம் டாலர் கடனை அடைக்கவும் சன் பார்மா ஒப்புக் கொண்டுள்ளது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் பங்குகள் ஜப்பானைச் சேர்ந்த டெய்சி நிறுவனம் வசம் இருந்தது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் சன் பார்மா வாங்கியுள்ளதாக இரு நிறுவனங்ளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜப்பானின் டெய்சி சாங்க்யோ வசம் 63.4 சதவீத பங்குகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா வில் உள்ள ரான்பாக்ஸி பங்குதா ரர்களுக்கு ஒரு பங்குக்கு 0.8 சன்பார்மா பங்கு கிடைக்கும்.

இந்த கணக்கீட்டின்படி பார்க்கும்போது ஒரு ரான்பாக்ஸி பங்கு விலை ரூ. 457 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 30 நாள் வர்த்தகத்தில் ரான்பாக்ஸி பங்கின் உச்சபட்ச விலையைக் காட்டிலும் 18 சதவீதம் உயர் மதிப்பாகும். ஏப்ரல் 4-ம் தேதியுடன் ரான்பாக்ஸின் அனைத்து பங்கு பரிவர்த்தனையும் முடிந்துள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருந்து தயாரிப்பில் ரான்பாக்ஸி மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. அதே அளவுக்கு அமெரிக்க சந்தையையும் ரான்பாக்ஸி தயாரிப்புகள் கைப்பற்றியிருந்தன. ரான்பாக்ஸியைக் கையகப் படுத்தியதன் மூலம் சன் பார்மாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்று சன் பார்மா வின் நிர்வாக இயக்குநர் திலீப் சாங்வி தெரிவித்தார். இந்த இணைப்பு மூலம் அபரிமிதமான வளர்ச்சியை எதிர் நோக்கியுள்ளோம். நிறுவனங்களின் பங்குதாரர்களையும் மதிக்கிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம் இந்தியா வில் ஜெனரிக் மருந்துப் பொருள் தயாரிப்பதில் மிகப் பெரிய நிறுவனமாக இது திகழும். இரு நிறுவனங்களும் இணைந் துள்ளதால் இந்நிறுவனத் தயாரிப்புகள் சென்றடையும் நாடுகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரு நிறுவனங்களுக்கும் சேர்த்து ஐந்து கண்டங்களில் மொத்தம் 47 உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவை தயாரிக்கும் மூலக்கூறு மருந்துகளின் எண்ணிக்கை 629-க்கும் மேலாக உள்ளது.

இரு நிறுவனங்களின் கூட்டு வருமானம் 420 கோடி டாலராகும். பங்கு பரிவர்த்தனைக்கு சன் பார்மா இயக்குநர் குழுமம் மற்றும் ரான்பாக்ஸி இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளன.

திங்கள்கிழமை காலையில் இந்த அறிவிப்பு வெளியானது பங்குச் சந்தையில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரான்பாக்ஸி நிறுவனம் சமீப காலமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தால் (யுஎஸ்எப்டிஏ) கடுமையான கட்டுப்பாட்டுக்கு உள்ளானது. இந்தியாவில் உள்ள ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு ஆலைகள் போதிய சுகாதார நடவடிக்கையைக் கடைப் பிடிக்கவில்லை என யுஎஸ்எப்டிஏ புகார் கூறியிருந்தது.

இந்நிலையில் சன் பார்மா நிறுவனம் ரான்பாக்ஸி பங்குகளை வாங்கியது சந்தையில் பெருமளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டுதான் டாய்சி நிறுவனம் முந்தைய மேம்பாட்டாளரான சிங் குடும்பத் திடமிருந்து ரான்பாக்ஸியை வாங்கி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x