Last Updated : 09 Dec, 2014 10:09 AM

 

Published : 09 Dec 2014 10:09 AM
Last Updated : 09 Dec 2014 10:09 AM

கட்டமைப்புத் துறை வளர்ச்சிக்கு திட்டப் பணிகள் தயார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

அடிப்படைக் கட்டமைப்புத் துறையை முடுக்கிவிட அரசிடம் 500 திட்டங்கள் தயாராக உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நேற்று டெல்லியில் இந்திய அமெரிக்க வர்த்தக சங்கம் (ஐஏசிசி) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியது:

கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்காக ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அரசு தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள ரூ. 2.8 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளில் ரூ. 1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் இப்போது கூடுதலாக ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அரசிடம் சுமார் 500 திட்டப் பணிகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 3 லட்சம் கோடியாகும். இவையனைத்தும் நிலம் கையகப் படுத்துவது, வனத்துறை ஒப்புதல் உள்ளிட்டவற்றால் நின்று போயுள்ளன என்று குறிப்பிட்டார்.

நின்று போயுள்ள திட்டப் பணிகள் குறித்த பட்டியலை எடுக்கு மாறு தனது அமைச்சகத்தில் ஒரு தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ள தாக அவர் குறிப்பிட்டார். டிபிஆர் எனப்படும் இப்பிரிவு இப்போது நடைபெற்றுவரும் பணிகளையும் கண்காணிக்கும் என்றார். முடங்கிப் போன ரூ. 2.8 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளில் ரூ. 1.8 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

நீண்ட காலம் உழைக்கக் கூடிய கான்கிரீட் சாலைகள் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதேசமயம் இரும்புத் தாது மூலம் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இத்தகைய முறையால் சாலைகள் நீண்ட காலம் பழுதடையாமல் இருப்பதோடு செலவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு 30 கி.மீ. தூர சாலை அமைப்பது என்ற இலக்கை நோக்கி தமது அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கட்கரி, வரும் ஆண்டுகளில் இத்துறையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு 2 சதவீத அளவுக்கு இருக்கும் என்றார்.

மின்னணு முறையில் இயங்கும் சுங்கச் சாவடிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டவர், இதன் மூலம் ரூ. 86 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றார். சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிற்பதால் ஏற்படும் எரிபொருள் செலவு ரூ. 60 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x