

நாட்டின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மின் கொள்கை விரைவில் வெளியாகும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், தமது அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரையை அமைச்சரவை குழு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும், இதன் மூலம் மின் சட்டம் 2013 விரைவில் வெளியாகும் என்றார்.
புதிய மின் கொள்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டார். மின் திருட்டுகளைத் தடுக்க தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகப்படுத்துவது, தவறு செய்வோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வகை செய்வது உள்ளிட்ட விஷயங்கள் புதிய கொள்கையில் இடம்பெறும் என அமைச்சர் பட்டியலிட்டார். அத்துடன் மின் வழங்கு நிறுவனங் களை நுகர்வோரே தேர்ந்தெடுக்க வகை செய்யும் திருத்தமும் இதில் கொண்டு வரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மின் விநியோக முறையில் தற்போது நிலவும் தேக்க நிலையைப் போக்கும் வகையில் அதிக நிறுவனங்கள் பங்கேற்கவும் போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் புதிய கொள்கை இருக்கும் என்றார். மின்சாரத்தை வாங்குவது தொடர்பாக ஏற்கெனவே மின் உற்பத்தி நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மின் உற்பத்தியாளர்கள் பாதிக் கப்படாத வகையிலும் புதிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மின் விநியோக முறையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் கூறினார்.
புதிய கொள்கையின்படி மின் உற்பத்தியாளர்கள் மின் விநியோகத்தைப் பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை. இங்கிலாந்தில் மின் உற்பத்தியை சில நிறுவனங்களும், மின் விநியோகத்தை சில நிறுவனங் களும் மேற்கொள்கின்றன. இது சிறப்பாக நடைபெறுகிறது. இதே முறையை இங்கும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே ஒருங்கிணைந்து வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங் களுக்கும் மின் விநியோகம் செய்கின்றன. புதிய கொள்கையில் இது மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது.