

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நடப்பாண்டில் ரூபாய் மதிப்பு 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. தொடர்ந்து நான்காவது வருடமாக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.
2013-ம் ஆண்டு 11 சதவீதம், 2012-ம் ஆண்டு 3 சதவீதம், 2011-ம் ஆண்டு 18 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்தது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.80 ஆக இருந்தது. இப்போது ஒரு டாலர் 63.6 ஆக இருக்கிறது. (நடப்பாண்டில் இன்னும் 3 வர்த்தக தினங்கள் இருக்கின்றன)
மற்ற வளரும் நாடுகளின் நாணய மதிப்புடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் சரியவில்லை, ரூபாயின் மதிப்பில் இருக்கும் ஏற்ற இறக்கம் 2015-ம் ஆண்டு குறையும் என்று ஐடிபிஐ வங்கியின் செயல் தலைவர் என்.எஸ்.வெங்கடேஷ் தெரிவித்தார்.
அந்நிய முதலீடு அதிகரித்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்தது ஆகிய காரணங்களால் ரூபாயின் மதிப்பு பெரிதாக சரியவில்லை. நடப்பாண்டின் பெரும்பாலான காலங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 முதல் 62 வரை இருந்தது. 2013-ம் ஆண்டு ரூபாய் அதிகபட்சமாக சரிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 68.85 ரூபாய் வரைக்கும் சரிந்தது.