Last Updated : 03 Dec, 2014 10:34 AM

 

Published : 03 Dec 2014 10:34 AM
Last Updated : 03 Dec 2014 10:34 AM

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைக்க திட்டம்: மாநிலங்களவையில் அருண் ஜேட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு அளவைக் குறைப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசுக்கு உள்ள பங்குகளை 52 சதவீத அளவுக்குக் குறைக்க முடிவு செய்துள்ளாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த விளக்கத்தில் அவர் கூறியது: பொதுத்துறை வங்கிகள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு வசதியாக அரசின் பங்கு அளவை 52 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டலாம். இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

வங்கிகளில் அரசுக்குள்ள பங்கு அளவை 52 சதவீத அளவுக்குக் குறைப்பதன் மூலம் அரசுக்கு ரூ. 89,120 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு 56.26 சதவீதம் முதல் 88.63 சதவீதம் வரை பங்குகள் உள்ளன.

2011-ம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசு வங்கிகளில் ரூ. 58,600 கோடியை மூலதனமாக விடுவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் 2018-ம் ஆண்டு தங்களது மூலதனத்தை ரூ. 2.40 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் அவை பேசல்-3 என்ற நிலையை எட்ட முடியும். நடப்பு நிதி ஆண்டில் அரசு ரூ. 11,200 கோடியை வங்கிகளுக்கு அளித்துள்ளது.

தற்போதைய விதிகளின்படி பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதத்துக்கும் கீழாகக் குறையக் கூடாது என்பதாகும். வங்கிகளின் வாராக் கடன் ரூ. 1.64 லட்சம் கோடியாக உள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்

காப்புரிமை பெற்ற மருந்து விலையை நிர்ணயிக்க குழு

காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கை எடுத் துள்ளது என்ற கேள்விக்கு, மக்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியது:

காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக அமைச்சகங்களுக்கிடையே இணைச் செயலர்களை உள்ள டக்கிய குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழு காப்புரிமை பெற்ற மருந்துகளைக் கண்டு பிடிப்பது மற்றும் அவற்றுக்கு எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது போன்ற ஆலோ சனைகளை வழங்கும் என்றார்.

சில காப்புரிமை பெற்ற மருந்து பொருள்களை தயா ரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிமறுக்கப்பட்டதால் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அந்நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை மூலப்பொருள் அடிப்படையில இந்திய நிறுவனங்கள் தயாரிப்பதே இதற்குக் காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவு

மருந்துப் பொருள்களின் விலை விவரம் குறித்த தகவல்களை அளிக்க அனைத்து மாநிலங்களிலும் விலை கட்டுப்பாட்டு பிரிவை தொடங்குவது குறித்து பார்மசூடிகல்ஸ் துறை பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார். இந்தப் பிரிவு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஆலோசனை அளிக்கும்.

உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப் படுவது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர், மருந்து விலைக் கட்டுப்பாட்டு விதி 2013-ன் அடிப்படையில்தான் விலைகள் நிர்ணயம் செய்யப்படு கின்றன. பிற நாடுகளில் மருந்து விலை விவரம் தற்போது கை வசம் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.

11 மாநிலங்களில் பருத்தி கொள்முதல்

பருத்தி விலை குறைந்ததால் 11 மாநிலங்களில் மத்திய அரசு நிறுவனமான பருத்தி கார்ப்பரேஷன் (சிசிஐ) மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா தெரி வித்தார்.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் (எம்எஸ்பி) பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். இப்பகுதியில் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்னையாகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையில் அதாவது ஒரு குவிண்டால் ரூ. 4,050-க்கு வாங்கப்படுவதாக அவர் கூறினார். பருத்தி விளையும் 11 மாநிலங்களில் மொத்தம் 92 மாவட்டங்களில் 341 மையங்கள் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

கையிருப்பு, தேவை, உற்பத்தி இவற்றின் அடிப்படையில் பருத்தி விலை நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். ஏற்றுமதி சரிவு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் பருத்தி விலை சரிந்ததாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x