தனிநபர் சேமிப்பை ஊக்குவிக்க வரிச்சலுகை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

தனிநபர் சேமிப்பை ஊக்குவிக்க வரிச்சலுகை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தல்
Updated on
2 min read

தனிநபர்களின் சேமிப்பை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். பணவீக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், இதுவரை கொடுக்

கப்பட்ட வரிச்சலுகைகள் போது மானதாக இல்லை. இதனால் முதலீட்டாளர்களின் சேமிப்பு குறைந்தது. அதனால் சேமிப்பை அதிகரிக்க கூடுதலாக வரிச் சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று புதுடெல்லியில் நடந்த பிக்கி விழாவில் (பாரத் ராம் நினைவு சொற்பொழிவில்) ராஜன் இவ்வாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சகம் பட்ஜெட் வேலைகளை ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்திருப்பது கவனிக் கத்தக்கது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிஸினஸ் செய் வதற்கு சாதகமான சூழ்நிலையை உரு வாக்கி இருந்தாலும், வரிச்சுமையினைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கவில்லை. உள்நாட்டுக் கடன் தேவையை முடிந்தவரை உள்நாட்டு சேமிப்பு மூலமே பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

நமது வங்கி அமைப்பு இப்போது நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது. நமது வங்கிகள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். திட்டங்களை மதிப்பீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும், மேலும் பொருளாதார தேவையை பொறுத்து திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். புதிதாக அனுமதி கொடுக்கப் பட்டிருக்கும் வங்கிகள் மற்றும் விரைவில் வர இருக்கும் சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகளை சமாளிக்க தற்போது செயல்பாட்டில் இருக்கும் வங்கி கள் தங்களது திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் வாராக்கடன் வசூலிக்கும் விஷயத்தில் வங்கி களுக்கு தடையாக ஆர்பிஐ இருக்காது. மேலும் இதில் ஆர்பிஐ, அரசு மற்றும் நீதிமன்றங்களும் சில வேலைகளை இங்கு செய்தாக வேண்டும்.

பணவீக்க விஷயத்தில் மத்திய அரசுடன் ஆர்பிஐ கலந்துரையாட இருக்கிறது. நடுத்தர காலத்தில் 2 முதல் 6 சதவீத பணவீக்கம் என்ற இலக்கை அடைவது குறித்து பேச இருக்கிறோம். இந்த பணவீக்க விகிதத்தை எந்த குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் அடைவது என்று பேச இருக்கிறோம்.மேலும் பணவீக்கத்தை குறைத்து நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை யை உருவாக்குவதுதான் ரிசர்வ் வங்கியின் பணி என்றார்.

``மேக் இன் இந்தியா’’ குறித்து பேசிய ரகுராம் ராஜன், உற்பத்தித் துறைக்கு மட்டும் சிறப்புக் கவனம் கொடுப்பது நல்லதல்ல என்று தெரிவித்தார். சீனாவில் உற்பத்தித் துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்காக, உற்பத்தித் துறைக்கு மட்டும் சிறப்பு கவனம் கொடுப் பதில் எச்சரிக்கை தேவை என்று தெரிவித்தார். சீனா ஏற்றுமதியை நம்பி வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தக் கொள்கையை பின்பற்றி நாமும் வளர நினைப்பது ஆபத் தானது. தன்னுடைய முதல் சுதந்தர தின உரையின் போது ``மேக் இன் இந்தியா’’ திட்டத்தை மோடி அறிவித்தார்.

மேலும் ``மேக் இன் இந்தியா’’ திட்டம் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்ற வாதமும் சரியல்ல. இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் போட்டி குறையும், தயாரிப்புகள் தரமில்லா மலும், வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகமாகவும் கிடைக்கும் என்றார். மேலும் இந்தியா உள்நாட்டு தேவையில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேளை வெளிநாட்டு வாய்ப்புகள் குறைந்தால் கூட உள்நாட்டு சந்தையை வைத்து வளர முடியும் என்றார்.

8 முதல் 9 % வளர்ச்சி அடையும்

இந்தியா 8 சதவீதம் முதல் 9 சதவீத வளர்ச்சி அடையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். உலகின் முக்கியமான மற்ற நாடுகள் (பிரேசில், ரஷியா, தென் ஆப்ரிக்கா) சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் இந்த நிலைமையிலும் 6 சதவீதம் முதல் 7 சதவீத வளர்ச்சி இந்தியாவில் சாத்தியம். வருங்காலத்தில் வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் வரை உயரும் என்று பிக்கி விழாவில் அவர் தெரிவித்தார். இந்தியா வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன, அதே சமயத்தில் சில இடர்பாடுகளும் இருக்கின்றன. வறுமை, அறியாமை உள்ளிட்ட பலவற்றுக்கு நாம் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிக்கான பாதையை நாம் அமைக்க முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in