

விமான போக்குவரத்து சேவையில் புதிதாக நுழையும் நிறுவனமான விஸ்தாரா வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் போக்குவரத்தை தொடங்குகிறது. டிக்கெட்கள் விற்கும் பணி கடந்த வியாழன் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் கூட்டாக ஆரம்பித்திருப்பதுதான் விஸ்தாரா. ஜனவரி 9-ம் தேதி டெல்லி - மும்பை, டெல்லி - அகமதாபாத் மற்றும் மும்பை - அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்தை தொடங்குகிறது விஸ்தாரா. ஜனவரி மாதம் 11-13 ஆகிய தேதிகளில் அகமதாபாத் நகரில் `வைப்ரன்ட் குஜராத்’ எனும் முதலீட்டு ஈர்ப்பு மாநாடு நடக்க இருக்கிறது.
148 இருக்கைகளுடன் இந்த விமானம் பறக்க இருக்கிறது. இதில் 16 இருக்கைகள் பிஸினஸ் வகுப்பு இருக்கைகளாகவும், 36 இருக்கைகள் பிரீமியம் எகானாமி மற்றும் 96 இருக்கைகள் எகானாமி பிரிவிலும் இருக்கிறது.இந்தியாவில் முதல் விமான சேவையை 1932-ம் ஆண்டு டாடா குழுமம் இயக்கியது. 1953-ம் ஆண்டு இந்த விமான நிறுவனம் தேசியமயமானது. விஸ்தாரா தவிர, மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியாவிலும் டாடாவின் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.