உற்பத்தி வரிச் சலுகை வாபஸ்: புத்தாண்டில் கார், பைக் விலை உயர்கிறது

உற்பத்தி வரிச் சலுகை வாபஸ்: புத்தாண்டில் கார், பைக் விலை உயர்கிறது
Updated on
1 min read

உற்பத்தி வரிச் சலுகை நீட்டிக்கப்படாததால் புத்தாண்டிலிருந்து கார், மோட்டார் சைக்கிள், நுகர்வோர் பொருள்களின் விலைகள் உயருகின்றன. இத் தயாரிப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உற்பத்தி வரிச் சலுகை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிகிறது. மேலும் இச்சலுகை காலம் நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரசு சலுகையை நீட்டிக்கப் போவதில்லை என அறிவித் துள்ளது.

அரசின் வரி வருவாயை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அதிகரிப்பதற்காக சலுகையை நீட்டிக்கும் முடிவை கைவிட்டதாக நிதித்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். வரி வருவாய் அதிகரிப்பதோடு பற்றாக்குறையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.1 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்துவதிலும் அரசு தீவிரமாக உள்ளது.

பொருளாதார தேக்க நிலை காரணமாக ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உற்பத்தி வரிச் சலுகையை அறிவித்தது. கார்கள், எஸ்யுவி-க்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நுகர்வோர் பொருள்களுக்கு கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் உற்பத்தி வரிச் சலுகை . கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும் பெரிய ரக எஸ்யுவி கார்களுக்கான வரி 27 சதவீதத்திலிருந்து 24 சதவீத மாகவும் குறைக்கப்பட்டது. நுகர்வோர் பொருள்களுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

ஜூன் மாதம் பொறுப்பேற்ற பாஜக அரசு இந்த வரிச் சலுகையை 6 மாதத்துக்கு நீட்டிப்பு செய்தது. அந்த சலுகைக் காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிகிறது. இது மேலும் நீட்டிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரிச் சலுகை நீட்டிப்பு கிடையாது என்பது தொடர்பாக முறையான அறிவிப்பு அரசிடமிருந்து வருவதற்காக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்த முடிவால் விலைகள் உயரும் என்று ஹோண்டா கார் நிறுவன துணைத் தலைவர் ஜானேஸ்வர் சென் தெரிவித்தார். இதனால் வாகன விற்பனை சிறிது காலத்துக்கு பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

அரசு எடுக்கும் எத்தகைய முடிவையும் ஏற்கத்தான் வேண்டும். இதற்கு மாற்று வழி கிடையாது. இதனால் விற்பனை பாதிக்கப்படும் என்பது நிச்சயம் என்று மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.

2015-ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை அதிகரிக் கும் என எதிர்பார்த்திருந்தோம். சலுகை நீட்டிக்கப்படாதது எங்க ளுடைய எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்துவிடும் போலிருக்கிறது என்று நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த எரிக் பிரிகான்ஸா தெரிவித்தார்.

கார்களுக்கான உற்பத்தி வரிச் சலுகை அளிக்கப்படாததால் விலை ரூ. 7,900 முதல் ரூ. 16 ஆயிரம் வரை உயரும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in