Last Updated : 18 Dec, 2014 10:52 AM

 

Published : 18 Dec 2014 10:52 AM
Last Updated : 18 Dec 2014 10:52 AM

பணக்காரர்களுக்கு மானிய விலை சிலிண்டர் ரத்தாகுமா? - மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்

பணக்காரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் அளிப்பதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.மாநிலங்களவையில் நேற்று இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் எழுத்து மூலமாக அளித்த பதில் விவரம்:

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன்படி பணக்காரர்கள் விருப்பப்பட்டால் மானிய விலையில் பெறும் சிலிண்டர்களை நிறுவனத்திடம் திரும்ப அளித்து விடலாம் என்பதாகும். இதற்குப் பதிலாக வெளிச் சந்தை விலையில் இவர்கள் எரிவாயு சிலிண்டர்களை வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதான், இப்போதைக்கு அரசிடம் இதுபோன்ற மானிய சலுகையை பணக்காரர்களுக்கு ரத்து செய்யும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்றார்.

இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள வாய்ப்பை பணக்காரர்கள் விரும்பி மானிய சலுகை பெற வேண்டாம் என நினைத்தால் அதை தேர்வு செய்யலாம். இது தொடர்பாக எரிவாயு சப்ளை செய்யும் விநியோகஸ்தரிடமிருந்து எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் அல்லது >www.mylpg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என்றார்.

மொத்தமுள்ள 15 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் 12,471 பேர் தங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் தேவையில்லை என கூறி விண்ணப்பித்துள்ளனர் என்றார். மானிய விலையில் சிலிண்டர் பெறுவதை எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன உயரதிகாரிகள் நிறுத்த முன் வர வேண்டும் என்று பிரதான் வலியுறுத்தினார்.

நுகர்வோருக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் அல்லது 5 கிலோ எடையுள்ள 34 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 5 கிலோ சிலிண்டர் விலை ரூ. 155 ஆகும். மானியம் அல்லாத நிலையில் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ. 752 ஆகவும் 5 கிலோ சிலிண்டர் விலை ரூ. 351 ஆகவும் இருக்கும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக மாநிலங்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களிடமிருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனையின் அடிப்படையில் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

இதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஒப்புக் கொண்டால் மட்டுமே இதை செயல்படுத்துவது சாத்தியம் என்று விளக்கம் அளித்தார்.

சமீபத்தில் வெளியான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இப்போது வேறு பணிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டியிருப்பது குறித்து விளக்கமளித்த அமைச்சர், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது அனைத்தும் மாநில அரசுகள்தான் என்றார்.

6 மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 39,245 ஹெக்டேர் நிலத்தில் வர்த்தக பணிகளுக்கு 5,402 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த நிலத்தில் 14 சதவீதமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x