

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. மொத்தம் 339 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 28119 புள்ளிகளாகக் குறைந்தது. இன்போசிஸ் நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 5 சதவீதம் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை கடந்த 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு 100 புள்ளிகள் சரிந்தது. இதனால் குறியீட்டெண் 8438 புள்ளிகளானது.
இன்போசிஸ் நிறுவனர்கள் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ. 6,484 கோடி) பங்குகளை விற்பனை செய்ததால் அந்நிறுவன பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் டிசிஎஸ், விப்ரோ நிறுவனப் பங்குகளும் அதிக அளவில் விற்பனையாயின.
வங்கித் துறையில் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. உலோக பங்குகளில் ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகியன 2 சதவீதம் முதல் 3.6 சதவீத அளவுக்குச் சரிந்தன. முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 23 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 நிறுவனப் பங்குகள் மட்டும் கணிசமான லாபம் ஈட்டின.
ஸ்டெர்லைட் பங்கு 3.60 சதவீதமும், ஹிண்டால்கோ 2.51 சதவீதமும், டிசிஎஸ் 2.51 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 2.35 சதவீதமும், டாடா ஸ்டீல் 2.01 சதவீதமும், பிஹெச்இஎல் 1.88 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 1.72 சதவீதமும் சரிந்தன. கோல் இந்தியா நிறுவனப் பங்கு 2.20 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஐடிசி 1.63 சதவீதமும், சன் பார்மா 0.91 சதவீதமும், ஓஎன்ஜிசி 0.63 சதவீதமும், சிப்லா 0.61 சதவீதமும் உயர்ந்தன.
ஒட்டுமொத்தமாக 1,797 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,151 நிறுவனப்பங்குகள் லாபம் ஈட்டின. மொத்த வர்த்தகம் ரூ. 3,165 கோடியாகும்.