Published : 23 Dec 2014 10:45 AM
Last Updated : 23 Dec 2014 10:45 AM

நிர்மா சோப் பவுடர்

ஸர்ஃப், ஏரியல், டைட், ரின், ஹெங்கோ, வீல், நிர்மா போன்ற பல சோப் பவுடர்கள் நம் எல்லோருக்கும் பரிச்சயமானவை. நம் நாட்டுக்கு சோப் பவுடர்கள் வந்து 57 வருடங்களாகிறது. 1957 - இல் ஸ்வஸ்திக் கம்பெனி டெட் (Det) என்னும் சோப் பவுடரை இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். டெட் - தான் இந்தியாவின் முதல் சோப் பவுடர். அதுவரை, துணி துவைக்கச் சோப்புக்கட்டிகள்தாம் பயன்பட்டுவந்தன.

நீல நிறத்தில்…

1959 – இல், பன்னாட்டு நிறுவனமான லீவர், ஸர்ஃப் சோப் பவுடரை அறிமுகம் செய்தார்கள். டெட் பவுடர் வெள்ளை நிறத்தில் இருந்தது. தங்களை வித்தியாசப்படுத்திக்காட்ட, லீவர் ஸர்ஃபை, நீல நிறத்தில் தயாரித்தார்கள். இரண்டாவதாகக் களத்தில் இறங்கினாலும், தன் மார்க்கெட்டிங் பலத்தால், ஸர்ஃப் விரைவில் நாடு முழுக்க முதல் இடம் பிடித்தது. சோப்புத் தூள் என்றாலே, ஸர்ஃப்தான், நீல நிறம்தான் என்று மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. 1969 வரை ஸர்ஃபின் ஏகபோக ஆட்சிதான். .

குஜராத் மாநிலத்தின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை (Geology and Mining Department) - யில் கஸன்பாய் பட்டேல் என்னும் 25 வயது இளைஞர் கெமிஸ்ட்டாக வேலை பார்த்தார். அகமதாபாதில் வேலை. மாதச் சம்பளம் 400 ரூபாய், பெரிய குடும்பம். வருமானம் போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

பிரச்சினையாக மாறிய துணி துவைப்பது

அவருக்கு இருந்தது கெமிஸ்ட்ரி அறிவு, புதிய விஷயங்களைச் சோதனை செய்யும் ஈடுபாடு, 18 மணி நேரம் உழைக்கத் தயங்காத மனம். இல்லாதது முதலீடு செய்யப் பணம்.

தன் கெமிஸ்ட்ரி அறிவைக்கொண்டு எந்தப் பொருளைத் தயாரித்தால் எளிதாக விற்க முடியும் என்று யோசித்தார். தன் வீட்டில் பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இருப்பதை அவர் பார்த்தார். துணிகளைத் தண்ணீரில் நனைத்துவைத்து, சோப்புக்கட்டி தேய்த்து, அழுக்கைப் போக்கி, அலசி....உடலை வருத்தும் வேலை. ஏராளமான நேரமும் எடுத்த வேலை.

மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களில், பணக்கார வீட்டுப் பெண்கள் துணி துவைக்க சோப் பவுடர் பயன்படுத்துவதையும், இதனால் உடல் உழைப்பும், நேரமும் மிச்சமாவதையும் கஸன்பாய் தெரிந்துகொண்டார். தன் வீட்டுப் பெண்களுக்கும் சோப் பவுடர் வாங்கித்தர நினைத்தார். கடையில் போய் விலையை விசாரித்தார். கிலோ 13 ரூபாய்! அவரைப் போன்ற நடுத்தர, மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கட்டுப்படியே ஆகாத விலை.

குறைந்த விலையில்…

கஸன்பாய் ஆலோசித்தார். ஸர்ஃபைவிட மிகக் குறைந்த விலையில் தன்னால் சோப் பவுடர் தயாரிக்கமுடியும் என்று அவர் கெமிஸ்ட்ரி மூளை சொன்னது.

தன் வீட்டின் பின்புறத்தில், 100 சதுர அடி இடத்தில், பரிசோதனைகளைத் தொடங்கினார். சக்சஸ்! மஞ்சள் நிறத்தில் அவருடைய சோப்புத் தூள் தயார். ஸர்ஃப் அப்போது கெட்டியான, கண்களை ஈர்க்கும் நிறங்களில் அச்சிடப்பட்ட அட்டைப் பாக்கெட்களில் வந்தது. அட்டைப் பெட்டிக்கு ஏன் வீண் செலவு செய்யவேண்டும்? கஸன்பாய் தன் சோப் பவுடரைச் சாதாரண பிளாஸ்டிக் கவர்களில் போட்டார். சோப் பவுடரின் பெயர்? அவருடைய மகள் நிருபமாவின் செல்லப் பெயரான நிர்மா.

கிலோ ரூ. 3 விலையில்

கஸன்பாய் தயாரிப்புச் செலவைக் கணக்குப் போட்டார். கிலோவுக்கு 3 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. சொற்ப லாபம் வைத்து, விற்பனை விலை கிலோவுக்கு 3 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார். ஸர்ஃப் கிலோ 13 ரூபாய்க்கு விற்கிறதே, அதிக லாபம் பார்ப்போமே என்று அவர் நினைக்கவில்லை. முடிந்தவரை குறைவான விலையில் விற்பனை செய்து, தன் தயாரிப்பை அதிகமான மக்களிடம் கொண்டுசேர்ப்பதுதான் அவர் குறிக்கோளாக இருந்தது.

1969. நிர்மா அறிமுகமானது. கஸன்பாய் தினமும் தன் டொக்கு சைக்கிளில் நிர்மா பாக்கெட்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டு, அலுவலகம் போவார். வழியில் கடை கடையாக நிறுத்துவார். தன் சோப் பவுடரைக் காட்டுவார். ஸர்ஃப், டெட் ஆகியவை கிலோ 13 ரூபாய்க்கு விற்றபோது, மூன்று ரூபாய்க்கு சோப் பவுடரா? நிர்மாவின் தரத்தைக் கடைக்காரர்கள் சந்தேகப்பட்டார்கள். விற்க மறுத்தார்கள். “விற்க வேண்டாம், உங்கள் வீட்டிலாவது டிரை பண்ணிப் பாருங்கள்” என்று கஸன்பாய் கடைக்காரர்களிடம் கெஞ்சினார். அவருடைய நச்சரிப்புத் தாங்காமல் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

ஆர்டர் கிடைத்தது

கடைக்காரர்களே நம்பமுடியாத ஆச்சரியம்! அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு நிர்மா சோப்புத்தூள் மிகவும் பிடித்துவிட்டது. கை கொஞ்சம் எரிந்தது. ஆனால், மற்றப்படி துணிகளைப் பளிச்சிட வைத்தது. கடைக்காரர்கள் மனம் மாறினார்கள். சின்ன ஆர்டர் கொடுத்தார்கள். போட்டிப் பவுடர்களைவிட விலை மிகக் குறைவாக இருந்ததால் ஏராளமானோர் நிர்மா வாங்கினார்கள். துவைத்துப் பார்த்தார்கள். அழுக்குத் துணிகள் சிரமமே இல்லாமல் பளிச்சிட்டன. மறுபடியும் மறுபடியும் வாங்கினார்கள். தங்கள் நண்பர்கள் எல்லோரிடமும், இந்த “அதிசய” சோப் பவுடர் பற்றிச் சொன்னார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. கஸன்பாய் சைக்கிள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.

சிறிய தொழிற்சாலை

நிர்மா சோப் பவுடர் என்றால், குறைந்த விலையில் துணிகளைச் சுத்தம் செய்யும் சோப் பவுடர் என்னும் அபிப்பிராயம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கஸன்பாய் வேலையை விட்டார். அகமதாபாத்,புறநகர்ப் பகுதியில் சிறிய தொழிற்சாலை தொடங்கினார். அகமதாபாத் மற்றும் குஜராத் மாநில மார்க்கெட்டுகள் நிர்மா கையில். விக்ரமன் பட ஹீரோ மாதிரி கஸன்பாய் அசுர வளர்ச்சி கண்டார்.

விலைக் குறைப்பு ஆயுதத்தால் உலகச் சாம்பியன் லீவரை குஜராத்தில் கண்ட வெற்றியை இந்தியா முழுக்க காணமுடியும் என்னும் தைரியம் கஸன்பாய்க்கு வந்தது. இதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் விளம்பரம். 1976 - ல் ரேடியோவில் விளம்பரம் செய்தார்.

நிர்மா, நிர்மா, வாஷிங் பவுடர் நிர்மா பாலைப்போல வெண்மை நிர்மாவாலே வருமே.... என்ற ஜிங்கிள் விளம்பரம் இந்தி, குஜராத்தி, தமிழ் போன்ற பல்வேறு மொழிகளில் வந்தது. இந்தியா முழுக்க மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது.

டி.வி. விளம்பரம்

கஸன்பாய் இன்னும், இன்னும் என்ன செய்து நிர்மாவை வளர்க்கலாம் என்னும் துடிப்புக் கொண்டவர். 1976. இந்தியப் பொழுதுபோக்கில் மிக முக்கியமான மாற்றங்கள் வந்துகொண்டிருந்தன. 1959 – இல் தொடங்கிய தொலைக்காட்சி, முதலில் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1976 – இல், அரசு தொலைக்காட்சியில், விளம் பரங்களை அனுமதித்தது. விளம்பர சார்ஜூகளும் அதிகம், பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே, இத்தகைய பெரிய செலவுகள் செய்தார்கள். ஆனால், துணிச்சலோடு, தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்யவும், பெருமளவு பணம் செலவழிக்கும் ரிஸ்க் எடுக்கவும் ஒரு சில நிறுவனங்கள் முடிவெடுத்தன. அவர்களுள் முன்னணியில் நின்றது நிர்மா!

ஆட்டம் கண்ட ஸர்ப்

1980 - களில், அதிகமானவர்கள் பார்த்த நிகழ்ச்சி, இந்தி சினிமா. சினிமா முடிந்தவுடன் அடுத்து வரும் விளம்பரத்தை ஏராளமானோர் பார்ப்பார்கள். அதனால், இந்த விளம்பர நேரத்துக்கு (Advertising Slot) சார்ஜ் அதிகம். அதிகச் சார்ஜ் கொடுத்து, நிர்மா, தூர்தர்ஷனில், இந்தி சினிமா முடிந்தவுடன், வீடியோக் காட்சியுடன் தன் ஜிங்கிளை ஒளி பரப்பியது. செம ஹிட்! நிர்மாவின் ஜிங்கிள் இந்தி தெரியாதவர்கள்கூட முணுமுணுக்கும் தேசிய கீதமானது. நிர்மா, அகில இந்திய பிரான்ட் ஆனது. ஸர்ஃப் ஆட்சி ஆட்டம் கண்டது.

இன்று நிர்மா நிறுவனத்தின் வருட விற்பனை சுமார் 4,000 கோடி. பணபலம், விளம்பர பலம் அத்தனையும் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஸர்ஃப் சோப் பவுடரை, சாமானிய கஸன்பாயின் நிர்மா ஜெயித்தது எப்படி? சோப் பவுடர், மேல் மட்டத்தினரும், நடுத்தரக் குடும்பத்தினரும் வாங்கும் பொருளாக இருந்தது. வருமானம் குறைந்த குடும்பங்களும் சோப் பவுடர் தரும் வசதிக்கு ஆசைப்படுவார்கள் என்று ஸர்ஃப் கணிக்கத் தவறிவிட்டார்கள். இந்த வெற்றிடத்தில் நுழைந்து நிர்மா சிம்மாசனம் போட்டுவிட்டது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x