

பங்குச் சந்தை வர்த்தகத்தில் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கடுமையான சரிவு காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 538 புள்ளிகள் சரிந்தன. இதனால் குறியீட்டெண் 26781 புள்ளிகளாக முடிந்துள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளும் ஏற்ற இறக்க வர்த்தகம் கண்டு வருவதால் இந்தியச் சந்தையிலும் இது எதிரொலிக்கிறது.
கடந்த 16 மாதங்களில் பங்குச்சந்தையில் இந்த அளவுக்கு புள்ளிகள் சரிந்தது இதுவே முதல்முறை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. இது இந்திய பங்கு வர்த்தகத்தையும் பெருமளவு பாதித்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் திங்களன்று வர்த்தகத்தின் இறுதியில் பெரும் சரிவை சந்தித்தன. இந்த சரிவை ஐரோப்பிய மத்திய வங்கி உடனடியாக சரி செய்யாததால் முதலீட்டாளர்களின் அச்சம் தொடர்கிறது. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரை தொழில்நுட்பம் மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. 27181.18 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம், வர்த்தக நேர முடிவில் 26781.44 புள்ளிகளாக சரிந்து முடிந்துள்ளது. வர்த்தகத்தில் உச்சமாக 27199.37 புள்ளிகள் வரை வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
வங்கிப்பங்குகள் 612.41 புள்ளிகள் இறங்குமுக வர்த்தகம் கண்டது. மேலும் சரிவைக் கண்ட துறைகள் விவரம்:
உலோகம் 440.74 புள்ளிகள், ஹெல்த்கேர் 408.82 புள்ளிகள், ஆட்டோமொபைல் 299.08 புள்ளிகள், எஃப்எம்சிஜி 247.88 புள்ளிகள், கன்ஸ்யூமர் டியூரபிள் 227.20 புள்ளிகள், ஆயில் அண்ட் காஸ் 140.11 புள்ளிகள் சரிவை சந்தித்தன. ஐடி துறை பங்குகள் 167.96 புள்ளிகள் ஏற்றத்தையும், தொழில்நுட்பத் துறை பங்குகள் 63.13 புள்ளிகள் ஏற்றத்தையும் சந்தித்தன. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியும் சரிவில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 152 (-1.85) புள்ளிகள் சரிந்து 8,067 புள்ளிகளில் நேற்றைய வர்த்தகம் முடிந்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 10 நாள் அவகாசம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நிதி திரட்டிக் கொள்ள 10 நாள் அவகாசத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த ரூ. 1,400 கோடி தேவை எனவும் நீண்ட கால அடிப்படையில் ரூ. 2,000 கோடி தேவை எனவும் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) சஞ்ஜீவ் கபூர் மற்றும் சன் குழும தலைமை நிதி அதிகாரி எஸ்.எல் நாராயணன் ஆகியோர் விமான ஆணையக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு மத்திய அரசு 10 நாள் அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் தாங்களாகவே நிதி திரட்டிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் ரூ.13.30 க்கு விற்பனையாகின பங்கின் விலை வர்த்தகம் முடிவில் 2.58 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ. 13.90 விலையில் முடிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 14.75 வரை வர்த்தகம் ஆனது.