Published : 26 Dec 2014 12:22 PM
Last Updated : 26 Dec 2014 12:22 PM

வாகனங்களுக்கும் விழாக்கால தள்ளுபடி

பண்டிகைக் காலத்தையொட்டி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதற்காக ஷோ ரூம்களில் பல்வேறு சலுகைகளும், விலைக்குறைப்பு யுக்திகளும் கையாளப்படுகின்றன.

பொங்கல், தீபாவளி, கிறிஸ் துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலம் வந்துவிட்டால் போதும் துணி துவைக்கும் பவுடரில் ஆரம்பித்து ஆடி கார் வரை பலரும் தள்ளுபடிகளை வாரி வழங்குகிறார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இந்த சலுகை காலத்துக்காக காத்திருந்து வண்டிகளை வாங்குகின்றனர். குறிப்பாக கார், பைக் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு வருடக் கடைசி வரை காத்திருப்பார்கள்.

இதனை விற்பனையாளர்கள் இயர் என்ட் சேல்ஸ் என்று சொல்லி பலவித சலுகைகளை அளிக்கின்றனர்.

இன்னும் 5 தினங்களில் புத்தாண்டு, 20 தினங்களில் பொங்கல் சும்மா இருப்பார்களா? வாகன டீலர்கள். தி.நகர், கிண்டி, எழும்பூர், சென்ட்ரல் என சென்னையின் பிரதான பகுதிகள் அனைத்திலும் பண்டிகை கால சலுகைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களுடன் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாளிதழ்களில் விளம்பரம், ரோட் – ஷோ என பலவிதங்களில் வாகன விற்பனைக்கான விளம்பரம் சூடுபிடித்துள்ளது.

இது குறித்து சென்னை நந்தனத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி வாசு கூறியதாவது:

பண்டிகைக் காலத்தில் சலுகைகளின் மூலம் கழிவுகளை தள்ளிவிடுவது என்கிற பேச்சே கிடையாது. இதனை சிலர் வேண்டுமென்றே பரப்பிவிடுகிறார்கள் எந்த வாகனமாக இருந்தாலும், அது கண்டிஷனில் இருந்தால் மட்டுமே வாடிக்கை யாளர்கள் நம்மை தேடி வந்து வாங்குவார்கள்.

இதனடிப்படையில் தான் சலுகைகள் வழங்கப்படுகின்றன. எங்கள் விற்பனை மையத்தில் வழக்கமாக விற்பனையாவதை விட தற்போது 15% அதிகளவில் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகிறது. இதில் அதிகம் விற்பனையாவது ஜிக்சர் மோட்டார் சைக்கிள்தான். இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது 80 முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன் வழக்கமான விலையை குறைத்து தற்போது ரூ.82,460-க்கு விற்பனை செய்கிறோம்.

இலவச உதிரிபாகங்கள்

இது தவிர, பழைய வாகனங் களை மாற்றுவோருக்கு கூடுதலாக ரூ.1000 போனஸ் அளிப்பது மற்றும் கிஃப்ட் வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. இது எல்லா கியர் வண்டிகளுக்கும் பொருந்தும். இது தவிர ஸ்கூட்டர்களுக்கு என்று குறைந்த முன் பணமாக ரூ.6,999 கட்டணம் செலுத்தினால் மாதம் 2,800 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு செலுத்த வேண்டும். வழக்கமாக 12 % , 14% என்றிருக்கும் வட்டி விகிதம் இப்போது 6.99% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ரூ.3000 வரை சேமிக்கலாம். மேலும் வண்டிகளுக்கான முக்கியமான சில உதிரி பாகங்களை இலவச மாகவே வழங்குகிறோம் என்றார்.

நிசான் விற்பனை மையத்தின் விற்பனை பிரதிநிதியான ஹரிஹரண் கூறியது: நிசானை பொறுத்தவரை எப்போதும் வருடக்கடைசி விற்பனையில் சலுகைகளை தாராளமாகவே வழங்கி வருகிறது. இந்தாண்டில் 6.31 லட்சம் முதல் 8.27 லட்சம் வரை விற்பனையாகும் நிசான் மைக்ரான் வாகனத்துக்கு 25,000 ரூபாய் வரை விலை குறைப்பு சலுகை வழங்கப்படுகிறது. சன்னி, டெர்ரான், இவெலியா , டட்சன் போன்றவைக்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தள்ளுபடிகள்

கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத் தினர் கூறியது: கார் பைக் என இரண்டுக்குமே சலுகைகளை வழங்கி வருகிறோம். இதில் ஆல்டோ காருக்கான விலையில் 35,000 ரூபாய் நாங்கள் குறைத்து கொள்கிறோம். மேலும் ஸ்விஃப்ட் கார் 6 லட்சம் என்ற அளவில், உள்ளது இதற்கு 10 ஆயிரம் ரூபாய் விற்பனை குறைப்பு செய்யப்படுகிறது. இது தவிர வேகன் ஆர் காரின் சந்தை விலை 4.90 லட்சமாக உள்ளது இதற்கு 30 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதே பஜாஜ் நிறுவன மோட்டார் சைக்கிள் முழுத் தொகையும் கொடுத்து எடுக்கிற பட்சத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர எக்ஸேஞ்ச் போனஸாக 1000 ரூபாயும் வட்டி விகிதத்தில் வழக்கத்தை விட 2% வரை குறைப்பும் தரப்படுகிறது என்றனர்.

இதேபோல் அடையாறு ராம்கே ஷோ ரூமில் நிறுவனத்தில் ரூ.4999 முன்பணத்திலேயே மொபெட் வகை வண்டிகள் விற்பனைக்காக உள்ளன. இதற்கான மாதாந்திர தவணை வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப செய்து தரப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட், அபாச்சே போன்றவை 1000 ரூபாய் போனஸ் எக்ஸேஞ்ச் தொகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. வேறெங்கும் இல்லாத அளவுக்கு 2.5% வட்டியில் வாகனங்கள் வழங் கப்படுகின்றன..

இதுமட்டுமன்றி கார்களை பொறுத்தவரை பெரும்பாலான விற்பனையிடங்களில் ரூ 20 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் என்கிற அளவில் விலையை தள்ளுபடி செய்து விற்கின்றனர். யமஹா, மஹிந்திரா, ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் தற்போது அக்சசரீஸ், சர்வீஸிங் காலம் போன்றவற்றை நீட்டித்து சலுகையாக அறிவித்துள்ளன.

இப்படி சலுகைகள் வழங்கப் படுவது குறித்து அண்ணா சாலை நிசான் விற்பனை பிரிவு மேலாளரான ஹரிஹரண் கூறுகை யில், “வழக்கமாக விற்பனை செய்வதை விட பண்டிகைகள் காலங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். ஒவ்வொரு நிறுவனமும் தனது முழு ஆண்டு விற்பனையை முடிக்கும் நேரத்தில், தனது அடுத்தகட்ட மாடல்களை உருவாக்க தயாராகி வரும், இந்த நேரத்தில் முந்தைய மாடல் கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப சலுகை அடிப்படையில் விற்கப்படுகிறது.

இது தவிர விழாக்கால சலுகைகளில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x