

ஃபோர்டு இந்தியா நிறுவனம் பழுதுள்ள 20,752 கார்களை திரும்பப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்நிறுவனத்தின் எஸ்யுவி ரகமான எகோ ஸ்போர்ட் மாடல் கார்களாகும்.
இந்தக் கார்கள் அனைத்தும் 2013-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்தக் காரில் உள்ள விபத்தின் போது விரிவடைந்து உயிர்களைக் காக்கும் ஏர்பேக் மற்றும் எரிபொருள் பாதையில் ஏற்பட்ட அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்காக இந்தக் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்தக் காரில் பக்க வாட்டில் உள்ள ஏர் பேக்குகளின் செயல்பாடும் சோதித்துப் பார்க்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிப்பது மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறுவனம் தாமாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தக் கார்களை வாங்கியவர்கள் அருகிலுள்ள ஃபோர்டு பழுது நீக்கும் மையத்தில் இலவசமாக சோதித்துக் கொள்ளலாம்.