

தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 2 சதவீதம் குறைந்ததால் கடந்த ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 வரை குறைந்துள்ளது.
நவம்பர் 24-ம் தேதி ஒரு சவரன் ரூ. 20,088 ஆக இருந்த தங்கத்தின் விலை அடுத்த நாள் ரூ.20,064 ஆகவும், நவ. 26-ம் தேதி ரூ. 19,984 ஆகவும் குறைந்தது.
நவ.27-ம் தேதி ஒரு சவரன் ரூ.19,968 என மேலும் சரிந்த தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரன் ரூ. 19,352-க்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.2,372, பவுன் ரூ.18,976 என்ற அளவுக்கு சரிந்தது. ரூ.18,500 வரை இறங்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் வர்த்தகம் முடிவில் ஒரு சவரன் ரூ.19,488 என்ற விலைக்கு உயர்ந்தது.
தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்ப்பதாக தங்க நகை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
பண்டிகைக் காலம் என்பதால் இந்த விலை சரிவை பயன்படுத்தி தங்க நகைகள் வாங்குவதற்கு நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.1,000 வரை விலை குறைந்துள்ளது.தை மாதத்தில் திருமண சீசன் தொடங்கும். இந்த சமயத்தில் தங்கத்தின் விலை குறைவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.