

இந்தியாவின் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் (2013-14) 9 சதவீதம் சரிந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தில் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரியின் பங்களிப்பு 15 சதவீதமாகும். கடந்த நிதி ஆண்டில் இத்துறை ஈட்டிய வருமானம் 3,950 கோடி டாலராகும்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் தேக்க நிலை காரணமாக இந்திய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி துறை கடும் சரிவைச் சந்தித்தது. அத்துடன் இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடும் இத்துறையைப் பெரிதும் பாதித்தது. இதனால் ஏற்றுமதி சரிந்ததாக இத்துறை யைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
முந்தைய ஆண்டில் (2012-13) இத்துறை ஏற்றுமதி வருமானம் 4,334 கோடி டாலராக இருந்தது. இத்துறை மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம்தான் இத்துறையின் ஏற்றுமதி அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். வர்த்தக அமைச்சகமும் இது குறித்து பரிசீலிக்குமாறு நிதி அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறது.
தங்கத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதால் கடத்தலுக்கு வழி ஏற்படும் என கூறப்பட்ட போதிலும் தங்கத்தின் மீதான வரி விதிப்பு குறைக்கப் படவில்லை.