Last Updated : 14 Dec, 2014 03:01 PM

 

Published : 14 Dec 2014 03:01 PM
Last Updated : 14 Dec 2014 03:01 PM

ஏன் வேலை செய்ய வேண்டும்?

என் பணியாளர்கள் ஏன் உழைக்கிறார்கள் என்ற கேள்வி இந்த புத்தகத்தின் அடி நாதம். நாம் அனைவரும் பணத்திற்காக மட்டும் வேலை செய்வது இல்லை பெருவாரியானவர்கள் பணத்தையும் தாண்டி ஒரு அர்த்தத்தை தேடி வேலை செய்கிறார்கள். ஏன் வேலை செய்கின்றோம் என்பதற்கு நாம் செய்ய கூடிய வேலையின் மூலமாக ஒரு சில காரணிகளை அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு அறிந்து கொள்ளக் கூடிய காரணிகள் அர்ப்பணிப்பு, இணைப்புகள், நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் என்பன ஆகும். உழைப்பின் அர்த்தத்தைத் தோண்டிப் பார்த்தால் கடினமான நேரங்களில் எதிர்த்து எழுந்தும், சுமூகமான நல்ல நேரங்களில் இயைந்து பணியில் ஈடுபடுவதும் என்ற விடைகள் கிடைக்கும்.

தேவ் மற்றும் வெண்டி உல்ரிச்சுகள் (கணவன் மற்றும் மனைவி) ஏன் வேலை செய்கின்றோம் என்று எழுதிய புத்தகம் தலைசிறந்த நூலாசிரியர்கள் மற்றும் மேலாண்மை ஆலோசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பெரும் வளம் உள்ள நிறுவனங்கள் என்று சில நிறுவனங்களைக் கண்டறிந்துள்ளார்கள். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுடைய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் இணைத்து நிறுவனத்தோடு வளரவும், வேலையில் ஒரு அர்த்தத்தையும், நிறுவன பங்களார்களின் மதிப்பு கூட்டுதலையும், பொதுவாக மனித நேயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மாற்றி யோசிக்கும் திறன், நம்பிக்கை, எதிர்த்து எழுதல், உறுதியாக இருத்தல், வளம் சூழ இருத்தல் மற்றும் தலைமைப் பண்புகள் போன்றவை பெருவளமுள்ள நிறுவனங்களில் காணப்படும்.

வேலையில் அர்த்தத்தை கண்டவர்கள் திறமையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருப்பார்கள். இது போன்று இருப்பவர்கள் வாடிக்கையாளரிடமும் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பார்கள். வாடிக்கையார்களிடம் உள்ள அர்ப்பணிப்பு உணர்வு மூலம் பணியாளர்கள் நிறுவனத்திற்கு லாபத்தை கூட்டுவார்கள்.

பெருவள நிறுவனங்களில் (Abundant Organisations) தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கொண்டு வரும் மாற்றங்களையும், புதுமைகளையும் பொறுத்தே வெற்றியை நோக்கி செல்கின்றன. அவ்வாறு தலைமை பண்பும் அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாத நிறுவனங்களில் பணியாளர்கள் தனித்து விடப்படுகிறார்கள். அதன் விளைவாக பெருவள நிறுவனங்களாக மாறுவது தடைபட்டுப் போகிறது. பெருவள நிறுவனங்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களைக் கீழே காண்போம்.

* அதிக அளவிலாக மன அழுத்தம், பதட்டம், தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகுதல் இவை மூலமாக செலவினங்கள் அதிகரித்து உற்பத்தி குறைதல். இதன் காரணமாக மன நலமும் மகிழ்ச்சியும் குறைகின்றது.

* இயற்கை வளங்கள் குறைந்து நம்பிக்கை அரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச் சூழலில் சமூதாய. தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகள் பாதிக்கின்றது. தொழில் நுட்பம், உலகமயமாக்கல், மக்கள் தொகை போன்றவை மிகவும் குழப்பமான பணிச் சூழலை ஏற்படுத்துகின்றது.

* அதிக அளவிலான நபர்கள் சமுதாயத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டும், அண்டை அயலாரிடமிருந்தும், சமுதாய குழுக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்

* பெருவாரியான பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து தங்களை துண்டித்துக் கொள்வதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்படுகின்றது. தொலை நோக்கு அணுகுமுறைகள் சிலநேரங்களில் மற்றவர்களை விட்டுப் பணியாளர்களை விலகச்செய்கின்றது.

* அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் இருந்து ‘வெற்றிக்கு நான் ஒருவனே’ என்ற மதமதப்பும், பகைமைத் தன்மையும் வளர்கிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள எது சரி அல்லது தவறு எது என்று கண்டறியக்கூடிய நேர்மறை உளவியலை போதித்து, ஒவ்வொருவரையும் பலப்படுத்த வேண்டும். சமுதாயக் கடைமைகளையும், நிறுவன கோட்பாடுகளையும், தனிநபர் ஊக்குவிப்பையும் ஒன்றுபடுத்தினால் நிறுவனம் வேறு, தான் வேறு என்ற சூழலிருந்து வெளிவரலாம்.

அதிக உற்பத்தித் திறன் கொண்ட குழுக்களை அமைப்பதன் மூலம் உற்பத்தி மேம்படும், அதன் விளைவாக நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஒருவரை ஒருவர் இணைத்துக் கொள்ளும் பண்பாடும், பயன்பாடும் உள்ள குழுக்களாக அவர்களை உருவமைத்தல் வேண்டும்.

சிறு சிறு கதைகள், பழக்க வழக்கங்களில், நிறுவன கொள்கைகள் முதலியவற்றை நேர்மறை சுற்றுச் சூழலோடு பிணைத்து, நேர்மறையான கலாச்சாரத்தை பணியாளர்களிடம் விதைத்து அவர்களை இணைத்தல் இன்றியமையாதது. பணியாளர்களின் திறமைகளை மேம்படுத்தி அவர்களின் அர்பணிப்பு உணர்வை வலுவாக்கி அவர்களின் பங்களிப்பை பெறுதல் முக்கியமானது. வளர்ச்சி. புதிதாக அறிதல், எதிர்த்து எழுதல் ஆகியவைகளை நிறுவன கலாச்சாரமாக உருவமைத்தல். இந்த நிறுவன கலாச்சரத்தை மக்களுக்கும், பொருட்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பொதுவானதாக மாற்றி அமைத்தல்.

மரியாதை அளித்து மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து வேறுபாடுகளை உயரிய பண்போடு ஏற்றுக்கொள்ளுதல். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு பணியாளர்களிடம் மகிழ்ச்சியையும், அவர்களை பற்றிய புரிந்துணர்வையும் ஊக்குவித்தல் அவசியம். பெருவள நிறுவனங்கள் கீழ்காணும் காரணிகளை அடைவதில் முனைப்பு காட்டுக்கின்றன.

* திறன்களை மேம்படுத்தி நிறுவனத்தை வலிமைப்படுத்துதல். சமுதாய, பொருளாதார பொறுப்புகளை உணர்ந்து நிறுவனத்தின் கொள்கை கோட்பாட்டையும் தனிமனித ஊக்கத்தையும் இணைத்தல்.

* அதிக உற்பத்தி திறன் மிக்க குழுக்களை உண்டாக்குவதை காட்டிலும் அதிக உணர்வுபூர்வமான குழுக்களை உருவாக்குதல்.

* நேர்மறையான சுற்றுபுறச் சூழ்நிலை யையும் நிறுவன பழக்கவழக்கங்களையும் கொண்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஒருங்கிணைத்தல். தொழிலாளர்களின் திறமைகளையும், அர்ப்பணிப்பையும் தாண்டி அவர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொள்ளுதல்.

* நிறுவனங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு வளர்ச்சி, புதிதாக கற்றறிதல் மற்றும் எதிர்த்து எழும் திறமைகளை வளர்த்தல். வெளிப்படையான சமூக வேறுபாடுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல் உள்ளார்ந்த தனிமனித வேற்றுமைகளைக் களைந்து, மற்றவர்களை பற்றிய உணர்வு பூர்வமான சிந்தனைகளை வளர்த்து நிறுவனத்தின் வளர்ச்சியை நோக்கி ஒருமுகப்படுத்தி ஊக்குவித்தல்.

இந்த புத்தகம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. கடினமான, குழப்பமான செய்திகளையும் நீரோடை போல் ஏதோ அனைவரும் அறிந்தது போல எழுதப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பொறுப்புகளை வகுப்பவர்களுக்கும், மேலாண்மைத் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கும் ஒரு துருவ நட்சத்திரமாக தென்படுகிறது. நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்கள் இதை படித்துப் பயன்பெறலாம்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x