

சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகள் சாதகமாக இருந் ததால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்றும் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி முதல் முறையாக 8500 புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்தது.
நவம்பர் 21-ம் தேதி சென்செக்ஸ் உச்சபட்சமாக 28360 புள்ளியைத் தொட்டது. அந்த நிலையை நேற்று தாண்டி 28514 புள்ளியை அதிகபட்சமாக தொட்டது. வர்த்தகத்தின் இடையே 164 புள்ளிகள் உயர்ந்து 28499 புள்ளியில் சென்செக்ஸ் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தகத்தின் இடையே 8534 என்ற அதிகபட்ச புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 52 புள்ளிகள் உயர்ந்து 8530 புள்ளியில் முடிவடைந்தது.
காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்துவது, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பான மசோதாக்கள் நேற்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சர்வதேச அளவில் நடந்த மாற்றங்களும் சந்தையின் ஏற்றத்துக்கு ஒரு காரணமாகும். சீனாவின் மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வட்டி விகிதங்களை குறைத்தது. இந்த வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இப்போது 7.3 சதவீதமாக இருக்கும் சீனாவின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சமும் இதற்கு காரணமாகும். பொருளாதார நெருக்கடி வந்தபோது கூட சீனாவின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் குறையவில்லை.
மேலும் ஐரோப்பிய பொருளாதாரம் பணவாட்டத்துக்கு செல்வதை தடுக்க மேலும் ஊக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்ற நம்பிக்கையும் இந்திய சந்தை உயர்வதற்கு ஒரு காரணமாகும். வங்கி, ஐடி, டெக்னாலஜி, மெட்டல், ரியால்டி ஆகிய துறைகள் உயர்ந்தும் எப்.எம்.சி.ஜி மற்றும் ஹெல்த்கேர் ஆகிய துறைகள் சரிந்தும் முடிவடைந்தன. வங்கிப்பங்குகள் தொடர்ந்து உயர்ந்தன. நேற்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பங்கு 2.46 சதவீதம் உயர்ந்தது.
இதனால் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது. 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியும் மூன்றாவது வங்கி மற்றும் ஒன்பதாவது நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியாகும். சீனாவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் இந்தியாவில் உலோகப் பங்குகள் உயர்ந்து முடிந்தன. ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், செயில் ஆகிய பங்குகள் அதிகபட்சம் 4.3 சதவீதம் வரை உயர்ந்தன.
10 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
இதற்கிடையே பிரைஸ் வாட்டர்
ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் 2034-ம் ஆண்டுக்குள் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரமாக உயரும் என்று கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு ஆண்டுக்கு 9% அளவுக்கு வளர வேண்டும். மேலும் கார்ப்பரேட் துறை மட்டுமே இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்க முடியாது. அரசாங்கத்தின் உதவியுடன் தொழில்முனைவோருக்கு சாதக மன சூழல் இருக்கும் பட்சத்தில் இந்த வளர்ச்சி சாத்தியம். ரிஸ்க் எடுக்கும் திறன், வேகமாக முடி வெடுப்பது, சரியான தலைமை ஆகியவை தேவை என்று பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் தீபக் கபூர் தெரிவித்தார்.